'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவரிடம் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்துள்ளது. அதில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.