Skip to main content

பத்தாம் வகுப்புக்கு மறுதேர்வு கிடையாது! - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

பத்தாம் வகுப்பு கணிதவியல் பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் தொடங்கின. இந்தத் தேர்வுகளின் போது 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம் வகுப்பு கணிதவியல் பாடங்களுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே லீக் ஆனதாக செய்திகள் வெளியாகின. முதலில் இந்த செய்தியை மறுத்த சி.பி.எஸ்.இ., பொருளியல் பாடத்திற்கு வருகிற 25ஆம் தேதியும், கணிதவியல் பாடத்திற்கு தேதி முடிவுசெய்தபின்னும் மறுதேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்தது.

 

மேலும், கேள்வித்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்திவந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், கேள்வித்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

 

 

15 நாட்களுக்குள் கணிதவியல் பாடத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் அனில் ஸ்வரூப், ‘லீக் ஆனதாக சொல்லப்பட்ட 10ஆம் வகுப்பு கணிதவியல் பாடத்தின் விடைத்தாள்களை முதற்கட்டமாக மதிப்பீடு செய்துள்ள நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, டெல்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் சேர்த்து சம்மந்தப்பட்ட பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்