தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் விரைவில் கூடவிருக்கும் நிலையில், துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு, கூட்டத்தொடரை தள்ளி வைப்பது என்றும், பட்ஜெட் மீதான விவாதத்தையும் அதனைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய மானிய கோரிக்கைகளையும் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார் ஸ்டாலின்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சட்டமன்றத்தில் கலைஞரின் படத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை சந்திக்க டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் படத்திறப்பு விழாவுக்கு தமிழகம் வர வேண்டும் என கோரிக்கை வைக்கவிருக்கிறார். அத்துடன், கலைஞரின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலைஞரின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி படத்திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.