Skip to main content

கம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார்...

Published on 22/01/2019 | Edited on 23/01/2019
lenin


 

நெல்லையில் உடையார்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது, சிபிஎம்-இன் மாவட்ட அலுவலகம். அதன் முன்னே கம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக நிற்கும் இந்த சிலையை தமிழகத்தின் தலைசிறந்த சிற்பி டாக்டர் சந்துரு வடிவமைத்துள்ளார். அவருக்கு உதவியாக காத்தப்பன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக செயல்பட்டுள்ளனர். இச்சிலையை திறப்பதற்கு சிபிஎம்-இன் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி நெல்லைக்கு மதியமே வந்தார். மாலை ஐந்து மணியளவில் நடந்த சிலை திறப்பு விழாவில் சிபிஎம்-இன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மத்திய கமிட்டி உறுப்பினர் வாசுகி மற்றும் சம்பத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். 
 

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிபிஎம்-இன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். மாலை ஆறு மணியளவில் லெனினின் மாபெரும் சிலையை சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார். அப்போது திரண்டிருந்த தோழர்கள் கரவொலி எழுப்பினார்கள். நான்கு அடி உயரம்கொண்ட லெனின் சிலை பீடத்தில் லெனினின் மார்க்ஸிய சித்தாந்தம் பொறிக்கப்பட்டிருந்தது.


 

seetaram




சிலையைத் திறந்தபின் சீதாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவரின் உரைவீச்சில் மோடி அரசின் கொள்கை பற்றிய எதிர்ப்பு வெளிபட்டது. யெச்சூரி பேசியதாவது...

இன்றைக்கு எதிர்கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு ஒற்றை மனிதனை எதிர்பதற்காக கூடியுள்ளார்கள் என்கிறார் மோடி. அதன் அர்த்தம் அப்படியல்ல. அவர்களேல்லாம் இணைந்திருப்பது, தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கமும் இந்த நாட்டில் மோடிக்கு எதிராக இணைந்திருப்பதையே காட்டுகிறது. அதன் எதிரொலியாக விவசாய தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி மகாராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒன்றிணைந்து பேரணிகள் நடத்தியிருக்கிறார்கள். முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஒழிப்பதற்கு இதுபோன்ற தொழிலாளர் வர்க்கங்கள் ஒன்றிணைந்திருக்கின்றன. நெல்லையில் லெனின் சிலை ஏன் அமைந்திருக்கிறதென்றால், இங்குதான் சுதந்திர போராட்ட வீரர்களான வ.வு.சி.யும், பாரதியாரும் பிறந்தார்கள். இவர்கள் சுதந்திரத்திற்காக போராடிய முன்னோடிகள், அதனால்தான் இங்கே நெல்லையில் லெனின் சிலை அமையப்பெற்றிருக்கிறது.

 

lenin




மேலும் மகாகவி பாரதியார் லெனினின் மார்க்ஸிய தத்துவத்தை பற்றி பாடலாகப் பாடியவர். வ.வு.சி., பாரதியார் ஆகியோர்களை வெள்ளை ஏகாதிபத்தியம் கைதுசெய்தபோது அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முதன்முதலாக தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கத்தினரும் போராடினார்கள். மோடி அரசின் பதினொறு பணக்காரர்கள் வங்கியின் பணத்தை கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். அதிலொருவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு நான் இனி இந்திய குடிமகன் இல்லை என்று சொல்லிவிட்டார். வெளிநாட்டிற்கு தப்பிய அவர்மீது எந்தவிதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இதுதான் தற்போதைய நிலை. மகாபாரதத்தில் கௌரவர்கள் தரப்பில் இரண்டுபேரை சொல்லுவார்கள் அதேபோன்றுதான் இப்போது மோடி, அமித்ஷா என்கிறார்கள். இந்துத்துவா அமைப்பினருக்கு கௌரவர்கள் நூறு பேர்களின் பெயர்கள் தெரியுமா தெரியாது எனவே மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். என்பதுதான் எங்களின் கொள்கை. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு துணை தேவைப்படுகிறது. எனவே அதற்கு துணையானவர்களையும் முறியடிக்கவேண்டும். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக்கொண்டிருக்கிறது. அவர்கள் சமூகநீதி கொள்கையை நிலைநாட்ட முற்படுகிறார்கள் என்று பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் தகவல்! 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rs.4 crore money confiscation issue; Released information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் 7 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பபட்டுள்ளது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகியுள்ளது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகியுள்ளது. நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.