தமிழகத்தில் லலிதா ஜூவல்லரி நிறுவனம் பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் நடந்த நகைக்கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது சென்னையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைப்போன நகைகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படைப் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ 200 கிராம் நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நகைகளை ஸ்டாக் எடுக்கும்போது நகைகள் குறைந்திருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது இந்தக் கடையில் கடந்த ஏழு வருடங்களாக ஸ்டாக் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் இந்த கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நகைகளை ஒரு பையில் வைத்து மறைத்து வைத்து பின்னர் அதனை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது. விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என தெரியவந்ததையடுத்து, அவரை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த நபரை பிடிக்க ராஜஸ்தான் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.