ஏழு பேர் விடுதலை குறித்த கேள்வுக்கு எந்த 7 பேர்? என்ற ரஜினியின் பதில் கேள்வி குறித்து சர்ச்சை எழுந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், ‘’எனக்குத்தெரியும் என்று தெரியும் என்று சொல்லிவிடுவேன். தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிடுவேன். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் குறித்து எனக்கு தெரியாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது. ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது. நான் பேசியது திரித்துக்கூறப்படுகிறது.
என்னைப்பொறுத்தவரைக்கும் அந்த கேள்வி தெளிவாக கேட்கப்படவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன். மற்றபடி, மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். பேரறிவாளன் பரோலில் வந்தபோது நான் அவரிடம் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ஆறுதல் கூறினேன்’’ என்று விளக்கம் அளித்தார்.