கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் ஓகி புயல் உருவாகி தாக்கியதில் கேரளா மற்றும் குமரி மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும், பல மீனவர்கள் காணாமல் போனார்கள். அவர்கள் இன்று வரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதோடு, குமரி மாவட்டத்தில் பல விவசாய நிலங்களூம் பாதிக்கப்பட்டதோடு லட்சக்கணக்கான மரங்களூம் முறிந்து விழுந்தன. அந்த தாக்கம் நேற்று முன் தினம் 100வது நாளை தாண்டியது.
இந்நிலையில், இன்றிலிருந்து 36 மணி நேரத்தில் குமரி மற்றும் கேரளாவில் ஓகி புயல் போன்று வேகமான காற்றோடு மழையும் வருமென்று வானிலை எச்சரித்திருந்தது. இதனால் குமரி மாவட்ட மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். மாவட்ட நிர்வாகமும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க போக வேண்டாம் என்று எச்சரித்திருந்தனர். இதையொட்டி கடந்த இரண்டு தினங்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதே போல் ஆழ் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களூம் கரைக்கு திரும்பினர்.
இந்த நிலையில் இன்று இரவு 10.30 மணிக்கு வேகமான காற்றுடன் கடும் மழையும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துகொண்டிருக்கிறது. இதனால் அடந்த காட்டுப்பகுதி மற்றும் மரங்கள் சூழ்ந்திருந்த பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் புயல் தாக்கும் என்று அச்சத்தில் இரவோடு இரவாக உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை தடை செய்துள்ளது. இதனால் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் குமரி மக்கள் அச்சத்திலும் கலக்கத்திலும் உள்ளனர்.
- மணிகண்டன்