Skip to main content

ஹதியா அவரது கணவருடன் சேர்ந்து வாழலாம்! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

ஹதியாவின் திருமண விருப்பத்திற்குள் தலையிட யாருக்கும் உரிமையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தனது திருமணத்தை ரத்துசெய்த கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த ஹதியாவின் நீதிப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின்னர் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கான எல்லா உரிமையும் ஹதியாவிற்கு இருப்பதாகக் கூறி தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

 

Hadiya

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, சந்திரசூட் மற்றும் கன்வில்கர் ஆகியோரின் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கேரள உயர்நீதிமன்றம் செஃபின் ஜெகானுடனான ஹதியாவின் திருமணம் செல்லாது என அறிவித்ததோடு, அவரது பெற்றோருடன் அனுப்பிவைத்தது. கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து செஃபின் ஜெகான் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்தத் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ‘வயது வந்தவர்கள் விரும்பிச் செய்துகொண்ட திருமணத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை. அரசியலமைப்புச் சட்டம் 226ன் படி நீதிமன்றம் எப்படி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்யமுடியும்? அதேசமயம், இந்தத் திருமணத்தில் லவ் ஜிகாத் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தேசிய புலனாய்வு நிறுவனம் அதன் விசாரணைகளை, இந்தத் திருமண விவகாரத்தில் தலையிடாமல் மேற்கொள்ளலாம். மேலும், ஹதியா அவரது எதிர்கால விருப்பங்களை சுதந்திரமாக தொடரலாம்’ என தீர்ப்பளித்துள்ளனர்.

 

குறிப்பாக, ‘ஒருவரின் திருமணம், பன்மைத்துவம், தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள் உள்ளிட்ட விஷயங்களில் மாநிலம் தலையிடுவது வைராக்கியமாக தடுக்கப்பட வேண்டும்’ எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஹதியா தனது சொந்த விருப்பத்தில்தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும், தனது கணவருடன் சேர்ந்து வாழவே தான் விருப்பப்படுவதாகவும் உச்சநீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துவந்தது நினைவுகூரத்தக்கது.

சார்ந்த செய்திகள்