தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் மனதை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் நடைபெற்ற துயர சம்பவம் அனைவிரின் நெஞ்சையும் உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தின் போது காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுப்பட்டுள்ளது. அவர்கள் உடல்நலம் முழுவதும் குணமடைந்து விரைவில் மீண்டு வருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும். மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2013 ஆம் ஆண்டு மூடப்பட்டது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டரீதியான தடைகள் வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. யாரையும் தேவையில்லாமல் கைது செய்யவில்லை. அரசு தனது கடைமையை முழுமையாக நிறைவேற்றி கொண்டிருக்கிறது. தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.