Skip to main content

வேல்முருகன் கைதைக் கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு!

Published on 01/06/2018 | Edited on 01/06/2018
jegan


தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேசவிரோத வழக்கு உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டிருபதைத் தாங்கிக் கொள்ளமுடியாத, அக்கட்சியின் தொண்டரான ஜெகன் நேற்று இரவு தீக்குளித்தார்.

கடலூர் மாவட்டம் பெரியான்குழியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தீவிர தொண்டர். தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற வேல்முருகனைக் கைதுசெய்த காவல்துறை, புதுப்புது வழக்குகளைப் புனைந்து அவருக்கு டாச்சர் கொடுத்துவருதைக் கண்டு மனம் வருந்திய ஜெகன், நேற்று இரவு திடீரெனத் தீக்குளித்தார்.

இதைப் பார்த்துப் பதறிய அவரது குடும்பத்தாரும், நண்பர்களும் அவரைக் கடலூர் அரசு மருத்துவமனைகுக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு எந்த மருத்துவரும் பணியில் இல்லை என மருத்துவமனைத் தரப்பு கைவிரிக்க, வேறுவழியின்றி அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவிக்கு ஏற்பாடு செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று காலை அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 80 சதவீதத் தீக்காயத்தோடு உயிருக்குப் போராடிய ஜெகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீக்குளித்த ஜெகனுக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது தம்பி ஜெகனின் நிலையைப் பார்த்துக் கதறித் துடித்த அவரது அண்ணன் திருமாவளவன்” என் தம்பியைப் போல் இளைஞர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தது அனைவரையும் நெகிழச் செய்தது. ஜெகன் மறைவைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கடலூர் அரசு மருத்துவமனையில் திரண்டுவருகின்றனர்.

- தமிழ் சூர்யா

 

சார்ந்த செய்திகள்