கடந்த தீபாவளி தினத்தன்று பெங்களூரில் உள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வீட்டில் மின் விளக்கு அலங்காரத்திற்கு மின்சாரம் திருடியதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்த மின்வாரிய அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 68,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதனிடையே, ,வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிலையில்,குமாரசாமி நேற்று (21-11-23) போஸ்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “கர்நாடகாவில் ஆபாச படங்களை திரையிட்டவரை தான் ஆட்சி அதிகாரத்தில் வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும், இந்த மாதிரி ஆட்களிடம் தான் அதிகாரத்தை கொடுத்துள்ளது. இது போன்ற படங்களை காட்டியவர் கட்சியின் தலைவராக இருந்தால் இப்படி தான் போஸ்டர்களை ஒட்டுவார்கள்” என விமர்சித்து குற்றம் சாட்டினார்.
குமாரசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “குமாரசாமியை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். எனது தொகுதி கனகபுராவிற்கு சென்று நான் ஆபாச படங்களை திரையிட்டேனா? என்று மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்படி அங்கு யாராவது, நான் அந்த மாதிரி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொன்னாலோ அல்லது குமாரசாமி அவரது குற்றச்சாட்டுகளை நிரூபித்தாலோ நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். முன்னாள் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. அவரது தரத்திற்கு இப்படியெல்லாம் பேசுவது அவருக்கு தான் அவமானம்” என்று கூறினார்.