கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதிவேகமாக வந்த அந்த ஆடி கார் பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதி, பின்னர் அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் பேருந்துக்காக காத்திருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆட்டோவும் அப்பளம்போல் நசுங்கியது.
ஆட்டோவின் உரிமையாளர் கூறும்போது, "என் பெயர் சிலம்பரசன். நானும் என் நண்பனும் ஆட்டோவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு ஒரு போன் வந்தது. போனை எடுத்து பார்த்தேன். என் மனைவி அழைத்திருந்தார். அவரிடம் பேசுவதற்காக ஆட்டோவை விட்டு கீழே இறங்கி சற்று தூரம் சென்று பேசினேன். அந்த சமயத்தில் தான் சொகுசு கார் பயணிகள் கூட்டத்தில் மோதி விட்டு எனது ஆட்டோவிலும் மோதியது. ஆட்டோவில் உட்கார்ந்திருந்த என் நண்பருக்கு என்ன ஆனது என்று பதறி அடித்து ஓடினேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டவசமாக என் நண்பர் காயமின்றி தப்பினார். ஆட்டோ ஒட்டுபவர்கள் கண்ணை மூடிட்டு வேகமாகப் போவதாக சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. இந்த சம்பவத்தை பார்த்தீர்களா? கார்ல போறவங்கதான், அதுவும் விலை உயர்ந்த கார்ல போறவங்கதான் இப்படி தாறு மாறாக ஸ்பீடா போறாங்க. இவுங்கள யாரு கேட்கறது? என்றார்.
சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் சிலர், 'மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இப்படி வேகமாக வரலாமா? இங்க மட்டுமில்லீங்க, தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊரு, தமிழ்நாடு பூரா இப்படித்தாங்க போறாங்க. பணக்காரங்க கார் வச்சிருந்தா எப்படி வேணுமானாலும் ஓட்டுலாமா? எங்க உசுரெல்லாம் உசுரில்லியா? ஊருக்குள்ள இப்படியா போவாங்க?' என்று கொதித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீசனை அங்கிருந்த பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.