இலங்கை பெட்ரோலிய அமைச்சகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதான முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விடுதலை செய்யப்பட்டார். 5 லட்சம் ஜாமீனில் ரணதுங்கவை விடுவித்துள்ளது கொழும்பு நீதிமன்றம்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போட்டியில் மகிந்த ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்க தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரணிலின் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த அர்ஜூன ரணதுங்க, நேற்று மாலை கொழும்புவில் உள்ள பெட்ரோலிய துறையின் தலைமையகத்துக்கு சென்றுள்ளார். அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுப்பதற்கும் அந்த அலுவலகத்தை ஒப்படைப்பதற்கும் சென்றுள்ளார். அலுவலகத்தில் ஆவணம் ஒன்றை அவர் எடுக்க முயன்றபோது மகிந்த ஆதரவாளர்கள் அர்ஜுன ரணதுங்க மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இதில் ஏற்பட்ட பதற்றத்தால் அர்ஜுன ரணதுங்க பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இந்த சம்பவத்தால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து இன்று கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார். பின்னர் 5 லட்சம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.