மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்தியை போலீசார் திட்டமிட்டே படுகொலை செய்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் பிரபல ரவுடிகளான முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் நேற்று மாலை போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கொலை, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அத்துடன் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளது.
இந்நிலையில் மதுரையில் ரவுடிகள் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்த காவல்துறையினர், அதிரடி நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்ய சென்றனர். அப்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மதுரை சிக்கந்தர்சாவடியில் ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை என்கவுண்ட்டர் செய்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வேறு வழியின்றி ரவுடிகளை சுட்டுக்கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச் செல்வி அளித்த பேட்டியில்,
போலீசார் ஆஜர்படுத்துமாறு கூறியதால்தான் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தோம். அளித்த வாக்குறுதியை மீறி இருவரையும் போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்த பின் குடும்பத்தினருக்கு போலீசார் முறையாக தகவல் கூட தெரிவிக்கவில்லை. உயிரிழந்த இருவரின் உடல்களை பார்க்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.