தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.
மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ள 12-ஆம் வகுப்பு தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவர்கள், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத உள்ளனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை கண்டறிந்தால், உடனே, அவர்களிடம் வாக்குமூலம் வாங்கி, உரிய ஆவணங்களுடன், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கைப்பேசி எடுத்துவரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.