அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தற்போது தனியாகச் செயல்பட்டு வரும் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி அதிமுகவில் தற்போது செயல்பட்டு வரும் இரு அணிகளைச் சேர்ந்தவர்களையும் விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அதிமுக அழிவதற்குக் காரணமாக இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் அதிமுகவின் நடப்பு அரசியல் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்குப் பதிலளித்த அவர், "அதிமுகவை எடப்பாடி பழனிசாமி தற்போது எங்கே நிறுத்தியுள்ளார் என்று நம் அனைவருக்கும் தெரியும். வரலாற்றில் இதுவரை பெற முடியாத வெற்றிகளைத் தமிழகத்தில் சாதித்துக்காட்டிய ஒரு உன்னத இயக்கமான அதிமுகவை இன்று டெல்லியிடம் அடமானம் வைத்துள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஒரு கட்சியை வழிநடத்தும் அளவுக்கு எந்தக் காலத்திலும் பலம் பொருந்தியவர் கிடையாது. குருட்டு அதிர்ஷ்டத்தால் அவர் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் பலருக்கு அவர் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டார். இன்றைக்குத் தமிழக அரசியலில் தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள ஏதாவது ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு ஓடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அம்மா முதல்வராக இருந்திருக்கிறார், ஆட்சியில் இல்லாமல் எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். அப்போது எல்லாம் இந்த மாதிரி தான் நடந்துகொண்டுள்ளாரா என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
இன்றைக்குத் தமிழகத்தில் மாநில அரசைக் கண்டித்துத் தொடர் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். நீங்கள் கூட, தமிழக அரசைக் கண்டித்து பால் விலை சொத்து வரி உயர்வு என இதனைப் பற்றிக் கூறி போராட்டம் நடத்தியுள்ளாரே தவிர அவர் லஞ்சம் வாங்குகிறார்கள், பணம் பேரம் நடைபெறுகிறது என்று எந்த இடத்திலும் கூறவில்லை. நீங்கள் தவறுதலாக அந்த வார்த்தையை இந்தப் போராட்டத்துடன் இணைத்துவிட்டீர்கள். அவர் இந்த வார்த்தைகளை மறந்தும் கூட பேசமாட்டார். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வேலை பார்த்த ஒப்பந்ததாரர்கள் அனைவரும் இந்த ஆட்சியிலும் பணியில் இருக்கிறார்கள்; வேலை செய்கிறார்கள். எடப்பாடி ஆட்சியில் நடைபெற்றதைப் போல அதே மாதிரி பணம் பார்க்கிறார்கள்.
இல்லை என்று தமிழக முதல்வரைக் கூறச் சொல்லுங்கள் பார்ப்போம். அவரால் இல்லை என்று நிச்சயம் மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ட்ரெயினிங் பெற்ற துறைச் செயலாளர்களை தற்போதைய அமைச்சர்கள் கேட்டுப் பெற்றுக்கொள்வதாகத் தகவல் வந்துள்ளது. அதாவது நல்ல முறையில் வரும்படி பெற்றுத்தருவார்கள் என்று நம்பி அந்த மாதிரியான அதிகாரிகள் விரும்புகிறார்கள். இவர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள மறைமுக தொடர்பு காரணமாகவே இது நடைபெறுகிறது.