கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி, தமிழகம் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்ல ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் நடக்காது என்றும், அவர்கள் எண்ணம் கனவாகவே போகும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்க் கருத்து தெரிவித்திருந்தார்.
இருவருக்குமான இந்த கருத்து பெரிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்த நாளே சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் தனக்கும் எம்ஜிஆருக்குமான உறவைக் கூறி நான் அவருடைய தீவிர ரசிகன் என்றும், என் மீது அவர் அளவற்ற பாசத்தை வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக திமுக மூத்த தலைவர் புகழேந்தியிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் தான் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகன் என்றும், தன் திரைப்படம் தொடர்பாகத் தன்னை தொலைப்பேசியில் அழைத்துப் பேசுவார் என்றும் கூறியிருந்தார். தற்போது எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில் அதிமுக வாக்கு வங்கி பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்குச் செல்லாமல் திமுக பக்கம் வருவதற்காகப் பேசப்பட்ட ஒரு பேச்சாகப் பார்க்கப்படுகிறதே? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழக முதல்வர் எங்கே இதைப் பேசினார் என்று முதலில் பார்க்க வேண்டும். தனியாக திடீர் என்று அறிக்கை வெளியிட்டாரா? எம்ஜிஆர் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஜானகி அம்மாளின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் இதை அவர் தெரிவித்தார். ஏனென்றால் ஜானகி அம்மாள் தலைவர் மீது அப்போதே நல்ல மரியாதை வைத்திருந்தவர். அந்த கல்லூரிக்குக் கூட கலைஞர்தான் அனுமதி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் அவரை புகழ்ந்து பேசியது என்பது அந்த நிகழ்ச்சியை ஒத்து அமைந்த ஒன்று. இது ஏதோ பிளான் செய்து பேசியது போலப் பேசத் தேவையில்லை.
எம்ஜிஆர் அவர்கள் அதிக ஆண்டுக்காலம் திமுகவிலிருந்தார் என்று கூறியது கூட அவர் 52 முதல் 72வரை இருந்த காலத்தைக் குறிப்பிட்டு சுமார் 20 ஆண்டுக்காலம் அவர் இருந்தார் என்றுதான் கூறினார். இதில் எதையும் கூறக்கூடாத செய்திகளை அவர் எதையுமே கூறவில்லையே. இது ஒரு மாபெரும் தலைவனுக்குரிய தகுதியாகத்தான் பார்க்க வேண்டும். எம்ஜிஆர் பத்தி அதிமுக எடப்பாடி குரூப்புக்கே எதுவுமே தெரியாது. எம்ஜிஆர் பற்றி தலைவர் பேசியதற்குப் பிறகு அவர் இன்னும் நூறு அடி உயர்ந்திருக்கிறார் என்பது மட்டும் நிஜம்.