கர்நாடகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், அங்கு ஆளாளுக்கு ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக 125 முதல் 130 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என்றும், தனது கணிப்பு ஒருபோதும் தப்பானதில்லை என்றும் எடியூரப்பா சொல்லியிருக்கிறார். அதேசமயம், எடியூரப்பா கனவுலகில் வாழ்கிறார் என்று காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது. மறுபக்கம், மதசார்பற்ற ஜனதாதள தலைவர், தான்தான் முதல்வர் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கர்நாடக அரசியிலில் கடந்த தேர்தல்களின் நிலையை அறிந்துகொள்ளலாமே. 2013 தேர்தலில் காங்கிரஸ் 223 இடங்களில் போட்டியிட்டு 122 இடங்களில் வெற்றிபெற்றது. மதசார்பற்ற ஜனதாதளம் 222 இடங்களில் போட்டியிட்டு 40 இடங்களை கைப்பற்றியது. பாஜக 222 இடங்களில் போட்டியிட்டு 40 இடங்களில் வெற்றி பெற்றது. எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதாக் கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றிபெற்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 30 லட்சத்து 69 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.
முந்தைய தேர்தலில் 110 தொகுதிகளை பெற்ற பாஜக 28 தொகுதிகளைப் பெற்ற குமாரசாமியிடம் கோல்மால் செய்து எடியூரப்பா விலக காரணமாக இருந்தது. அதைத்தொடர்ந்தே அவர் தனிக்கட்சி தொடங்கினார்.
2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரம் வாக்குகளை பெற்றது. மதசார்பற்ற ஜனதாதளம் 63 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது.
பாஜக தனித்து 62 லட்சத்து 36 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அந்த வாக்குகளுடன் எடியூரப்பாவின் வாக்குகளையும் சேர்த்தால் சுமார் 93 லட்சம் வாக்குகள் ஆகும். இந்த பிரிவு சுமார் 72 இடங்களை பாஜக இழக்க காரணமாக இருந்தது.
நடந்து முடிந்த 2018 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்துக்கணிப்பை காங்கிரஸும் பாஜகவும் ஒதுக்கித் தள்ளுகின்றன. ஆனால், மதசார்பற்ற ஜனாததளம் கட்சி அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இரண்டு கட்சிகளிடமும் பேரம்பேசி முதல்வர் பதவியைப் பெறலாம் என்ற கணக்கில் இருக்கிறது.
2008 தேர்தலில் பாஜக 110 இடங்களில் வெற்றிபெற்று 6 சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அந்த 6 பேரில் 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பொறுப்பேற்ற எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவி விலகினார். அதைத்தொடர்ந்து சதானந்த கவுடா முதல்வரானார். அவருக்கும் எடியூரப்பா ஆதரவாளர்களுக்கும் ஒத்துவராததால் குழப்பம் ஏற்பட்டது. எடியூரப்பா தன்னை மீண்டும் முதல்வராக்கும்படி கட்சியை வலியுறுத்தினார். ஆனால், ஜெகதீஷ் ஷட்டரை முதல்வராக நியமித்தது பாஜக மேலிடம்.
இதில்தான் அதிருப்தி அடைந்து தனிக்கட்சி தொடங்கினார் எடியூரப்பா. அதையடுத்து, 2013 தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. காங்கிரஸ் 122 இடங்களுடன் வெற்றிபெற்று சித்தராமய்யா தலைமையில் ஆட்சி அமைத்து முழுமையாக 5 ஆண்டுகளை பிரச்சனையின்றி கடந்தது. இதுவே சித்தராமய்யாவின் திறமைக்கு சாட்சியாக கருதப்படுகிறது.
இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்குள் சித்தராமய்யாவுக்கு போட்டி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், கட்சி மேலிடம் தலித் ஒருவரை கர்நாடகா முதல்வராக நியமித்தால் வரவேற்பதாக சித்தராமய்யா கூறியிருக்கிறார். இதுபோன்ற சமூகநீதிக்கு ஆதரவான கருத்துக்களால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மதசார்பற்ற ஜனதாதளத் தலைவரான குமாரசாமி, தன்னை கிங் மேக்கர் என்று அழைப்பதை விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். தானே கிங் என்றும் அடித்துச் சொல்லியிருக்கிறார். இதற்கு காரணம் தொங்கு சட்டசபை அமைந்தால் தனக்கு முதல்வர் பதவி அளிப்பவர்களுக்கே ஆதரவு என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சித்தராமய்யா கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சித்தராமய்யா மதசார்பற்ற ஜனதாதளத்திலிருந்து காங்கிரஸுக்கு மாறியவர். அவருக்கும் குமாரசாமிக்கும் கருத்துவேறுபாடு நீடிக்கிறது. அதேசமயம் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுக்கு எந்த முடிவுக்கும் சித்தராமய்யா சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது.
நாளை முடிவு தெரிந்துவிடும். காங்கிரஸா? பாஜகவா? கூட்டணி அரசா என்று!