காஷ்மீரில் எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் பாதுகாப்புப் படையினருடன் பொதுமக்களே மோதுகிற நிலையை உருவாக்கிவிட்டு மெஹபூபா அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கியுள்ளது பாஜக.
வரும் செப்டம்பர் மாதம் பாஜக கூட்டணியிலிருந்து விலக மெஹபூபா திட்டமிட்டிருந்தது. அதை ஸ்மெல் செய்த பாஜக அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது தனது இமேஜை பெரிய அளவில் டேமேஜ் செய்யும் என்று முந்திக் கொண்டது என்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், 2015 மார்ச் மாதம் கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்தே இரண்டு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் இருந்துகொண்டே இருந்தது. முதல்வராக இருந்த முப்தி முகமது சயீது இறந்தவுடன், அவருடைய மகள் மெஹபூபாவை முதல்ராக்குவதற்கு பாஜகவில் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், ஆட்சியைத் தொடர வேண்டுமே என்ற அல்ப ஆசையில் மெஹபூபாவை ஏற்க வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டது.
2014 டிசம்பர் மாதம் நடந்த காஷ்மீர் பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 28 இடங்களுடன் தனிப்பெருங்கட்சியாக வந்த மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரசும் விரும்பின. இந்தக் கட்சிகளுக்கு 15 மற்றும் 12 இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால், முப்தி முகமது சயீது பாஜகவின் மடியில் அமர்ந்துவிட்டார். மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு என்று அவர் கூட்டணியை வர்ணித்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பாஜகவுடன் முப்தி முகமது அமைத்த கூட்டணி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. இந்தக் கூட்டணியை காஷ்மீர் மக்களும் ஏற்கவில்லை.
முப்தி முகமது முதல்வராக பொறுப்பேற்றவுடன், பிரிவினைவாதத் தலைவர்களில் மூத்தவரான மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டார். இதை பாஜக கடுமையாக எதிர்த்தது. 2016 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி முப்தி முகமது சயீது இறந்தார். அதையடுத்து அவருடைய மகளுக்கு முதல்வர் வாய்ப்பை வழங்குவதில் பாஜகவுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பிறகு மெஹபூபா 2016 ஏப்ரலில் முதல்ராக பொறுப்பேற்றார். இதையடுத்து பாஜகவின் எம்பி தாரிக் ஹமீது கர்ரா ராஜினாமா செய்தார். 2016 ஜூலை 8 ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி பாதுகாப்புப்படை என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அதை கொடூரமான நிகழ்வு என்று கூறிய தாரிக் ஹமீது பாஜகவிலிருந்தும் விலகினார்.
இதையடுத்து மக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. தீவிரவாதிகளுடன் தொடர்பு என்றும், தீவிரவாத அமைப்பில் உறுப்பினர் என்றும், பிரிவினைவாத அமைப்பினர் என்றும் கூறி அடிக்கடி இஸ்லாமிய இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்து சித்திரவதைக்கு ஆளாக்கினர்.
தீவிரவாதிகளுக்கு பாதுகாப்புக் கொடுப்பதாக இஸ்லாமிய வீடுகளை திடீரென்று சோதனை நடத்தவதும் வாடிக்கையாகியது. இதையடுத்து பெண்களே நேரடியாக பாதுகாப்புப் படையினருடன் மோதத் தொடங்கினர். தங்களுடைய பகுதிக்கு போலீஸாரோ, பாதுகாப்பு படையினரோ தேவையில்லை என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவிகளை கற்களை வீசி தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். அத்தகைய தாக்குதலை சமாளிக்க முடியாமல் அப்பாவி இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன் கட்டிவைத்து நீண்டதூரம் பயணம் செய்த ராணுவ அதிகாரி ஒருவரைப் பற்றிய வீடியோவும் புகைப்படமும் வைரலாக பரவியது.
பாதுகாப்புப் படையினரின் ரப்பர் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் பலர் பார்வையிழந்தனர். மனித உரிமைக் கமிஷன் கடுமையாக விமர்சனம் செய்தது. எல்லையில் பயங்கரவாதத் தாக்குதலும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலும் அதிகரித்தது. இதை திசைதிருப்புவதற்காக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்தது. இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரத்தை, விடியோ காட்சியை வெளியிடும்படி எதிர்க்கட்சிகளே கேட்கும் நிலை உருவானது. ஆனால் அரசு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.
மோடி பிரதமரானால் காஷ்மீர் எல்லையிலும், சீன எல்லையிலும் அமைதி திரும்பிவிடும். இரண்டு ராணுவமும் பயந்து நடுங்கிவிடும் என்று பிரச்சாரம் செய்தார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கிவிடுவார்கள் என்றார்கள். காஷ்மீர் பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்த மோடி, பாஜகவை தேர்ந்தெடுத்தால் காஷ்மீரை சொர்க்க பூமியாக மாற்றுவோம் என்றார். ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காஷ்மீர் ரத்தக்களறியாகிவிட்டது.
அதுமட்டுமின்றி 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்திய மக்கள் தங்கள் சேமிப்புப் பணத்தை மாற்றுவதற்காக தெருத்தெருவாக அலைந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் பணப்புழக்கத்தை தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக மோடி அப்போது சொன்னார். ஆனால், அந்த நடவடிக்கைக்கு பிறகுதான் காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளிலும் பிரிவினைவாத அமைப்புகளிலும் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்வதாக புள்ளிவிவரங்கள் வெளியாகின.
கதுவா சம்பவம்தான் காஷ்மீர் கூட்டணி அரசுக்குள் பிரச்சனை முற்ற முக்கிய காரணமாகியது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கதுவா என்ற இடத்தில் 8 வயது இஸ்லாமியப் பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொன்று வீசிய சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாமல் உலகையே தலைகுனிய வைத்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பாஜக ஆட்களை போலீஸ் கைதுசெய்தது. ஆனால், அவர்களுக்கு ஆதரவாக பாஜக நடத்திய பேரணியில் அந்தக் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களே கலந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் மெஹபூபா இதை வன்மையாக கண்டித்தார். உடனே இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமா ஏற்கப்பட்டது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது ஏற்படுத்திய பதற்றம் ஒய்வதற்குள், ஜூன் 16 ஆம் தேதி இந்திய ராணுவவீரர் அவுரங்கசீப்பை தீவிரவாதிகள் கடத்திப் படுகொலை செய்தனர்.
ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் வேளையில் நடைபெற்ற அடுத்தடுத்த இந்த இரண்டு சம்பவங்களும் காஷ்மீரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசும், காஷ்மீர் அரசும் நிர்வாகரீதியாக தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸும், தேசியமாநாட்டுக் கட்சியும் கடுமையாக குற்றம் சாட்டின. இந்நிலையில்தான் மெஹபூபா அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ்பெற பாஜக முடிவு செய்தது. 19 ஆம் தேதி மதியம் பாஜக மூத்த தலைவர் ஒருவர் மெஹபூபாவிடம் இதை தெரிவித்தவுடன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கூட்டணி அரசு முடிவுக்கு வந்ததும், மெஹபூபாவுடன் எந்தக் கூட்டணியும் கிடையாது என்று காங்கிரஸும், தேசியமாநாட்டு கட்சியும் அறிவித்துவிட்டன. காஷ்மீரில் விரைவாக மக்களுடைய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநரைக் கேட்டுக் கொண்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு முதல் ஆளுநராக பொறுப்பு வகிக்கும் என்.என்.வோரா காஷ்மீரில் அமைதி திரும்ப நல்ல நடவடிக்கை எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், ஆளுநர் ஆட்சியை பயன்படுத்தி ராணுவம் தனது இஷ்டப்படி காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுமோ என்ற கவலையையும் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.