தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சித்தான்:
சி.ஆர்.சரஸ்வதி தாக்கு
குமரியில் 97 பேர் நீக்கம், திண்டுக்கல்லில் 116 பேர் நீக்கம் என்ற ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டுக்கு முதல் அமைச்சர் வரவேற்பு, சசிகலா குடும்பத்தை சேர்க்க மாட்டோம். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்ற ஜெயக்குமாரின் பேட்டி குறித்து டிடிவி தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் கூறியது...
அதிமுக பைலாவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் கிடையாது. பொதுச்செயலாளருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. கட்சியும், சின்னமும் அவர்களிடத்தில் கொடுக்கும்போது, அவைத் தலைவர் மதுசூதனனுக்கு எல்லா உரிமையும் உள்ளது. அவர் இந்த கட்சியும், கொடியும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தலாம் என்றுதான் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. சசிகலா பொதுச்செயலாளர், தினகரன் துணைப்பொதுச்செயலாளர் இல்லை என்று எந்த இடத்திலேயும் குறிப்பிடப்படவில்லை.

மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவு இறுதியானது அல்ல. இவர்கள் நடத்திய செயற்குழு, பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றதிற்கு சென்றுள்ளோம். மத்திய பாஜக அரசின் தயவில்தான் தற்போது இந்த கட்சியும், சின்னமும் இவர்களுக்கு கிடைத்திருக்கிறதே தவிர, சட்டப்படி, முறைப்படி அவர்களிடம் கட்சியும் சின்னம் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இப்போது உள்ள மந்திரிகள் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தார்கள். ஒரு மந்திரியின் 5வது, 4வது பேரனுக்கு காதுகுத்து விழாவுக்கு ஆடம்பரமாக பேனர்கள் வைக்கப்பட்டு அதில் முதல் அமைச்சரும், துணை முதல் அமைச்சரும் கலந்து கொண்டுள்ளனர். இங்கு பெட்ரோல், டீசல் விலை உயருகிறது. பஸ் கட்டணம் உயருகிறது என மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்கிறார்கள்.

டிடிவி தினகரன் அணியை விடுங்கள், எங்களை தவிர்த்து உள்ள மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய பட்ஜெட் ஒரு அலங்கார பட்ஜெட், தேர்தலை மனதில் வைத்து கொடுக்கப்பட்ட பட்ஜெட் என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள். 250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள கம்பெனிகளுக்கு வரி குறைவு, அப்போது சிறு, குறு தொழில் நடத்துபவர்களுக்கு என்ன பயன். தங்கம், வெள்ளி, வைரம் எல்லாமே விலை உயர்ந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பழங்கள், பழச்சாறுகள் விலை ஏறியுள்ளது. அப்படி இருக்கும்போது தமிழக முதல் அமைச்சர் பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிடுகிறார். ஜெயலலிதா இருந்தபோது மத்திய பட்ஜெட்டை வரவேற்று அறிக்கை வெளியிட்டாரா. பட்ஜெட்டில் உள்ள குறைகளை சொல்லுவார். ஜெயலலிதா வழியில் நடக்கும் ஆட்சி என்று சொல்லும் நீங்கள் ஏன் வரவேற்றீர்கள். இதிலிருந்தே தெரிகிறது, இது ஒரு பாஜகவை சார்ந்த அரசு. இது அதிமுக அரசு அல்ல. பாஜக அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.
இனி ஆட்சிக்கு வருவோமா, பதவிக்கு வருவோமா என்ற சந்தேகம் உள்ளதால், மத்திய அரசுக்கு இணக்கமாக சென்று இருக்கும் வரை சுருட்டிக்கொள்வோம் என்று சுருட்டுகிறார்கள். மக்களைப் பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியாளர்கள்.
-வே.ராஜவேல்