தமிழகத்தில் உதயநிதி அமைச்சரானதிலிருந்து தொடர்ந்து வாரிசு அரசியல் என்ற வார்த்தை பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நபர்கள் உதயநிதி வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக அமைச்சராக்கப்பட்டுள்ளார் என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனம் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? அல்லது அதீதமான விமர்சனமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வழக்கறிஞர் பாலு அவர்களிடம் இதுதொடர்பாக கேட்டபோது, " கட்சியில் உள்ளவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தையோ அல்லது ஒருவரையோ தலைவராக அக்கட்சியில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டால் அக்கட்சியின் தனிப்பட்ட முடிவு. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
பாரதிய ஜனதாவில் யாரை முதல்வராகக் கொண்டு வருகிறார்கள், யாரைப் பிரதமராகக் கொண்டு வருகிறார்கள் என்பதை நாம் முடிவு செய்வதில்லை, மக்கள் வாக்களிக்கிறார்கள். அவர்கள் கட்சிக்குள் பேசி ஒருவரை அந்தந்த பதவிக்கு நியமிக்கிறார்கள். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அதைப்பற்றிப் பேசவேக் கூடாது, மண்புழு போல் மேசைக்கு அடியில் தவழ்ந்து வந்து அவர் பதவியைப் பெற்றதை யாருமே மறந்திருக்க முடியாது. அவர் எல்லாம் உதயநிதியைப் போல் கட்சி தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர் கிடையாது. காலில் விழுந்து பதவியை வாங்கிய நபரும் அல்ல. அடுத்து பன்னீர்செல்வத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. அவருடைய கூட்டணிக் கட்சித் தலைவர் அன்புமணியே டயரை தொடர்புப்படுத்தி அவரைப் பற்றிச் சொல்லிவிட்டார்.
எனவே அதிமுகவில் அவரைப் பற்றிப் பேச யாருக்கும் எந்த வித அருகதையும் இல்லை. பாஜகவில் இன்றைக்கு எத்தனை மூத்தத் தலைவர்களின் உறவினர்கள் எம்.பிக்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வாரிசு என்ற ஒரே காரணத்துக்காகவே அவர்களின் தகுதியைத் திறமையை நாட்டு மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது எவ்விதமான ஜனநாயகம் என்பது தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என்பது தனிப்பட்ட நபர்கள் மீது வெறுப்பை உமிழும் ஒன்றாகவே தற்போதைய காலங்களிலிருந்து வருகிறது. ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைப்பதே சிறந்த ஜனநாயக முறையாக இருக்கும். ஆனால் பலர் அதைச் செய்வதில்லை" என்றார்.