அரசியல் தொடர்பு! அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப் போகும் தேதி, பெங்களூரு விசிட், மன்ற நிர்வாகிகள் ஆலோசனை, பிறந்தநாள் விழா என ரஜினியை சுற்றும் பரபரப்பு தொடர்கிறது. உடல் நிலையைக் காரணம் காட்டித்தான் கொரோனா நேரத்தில் அரசியலுக்கு வரத் தயங்குவதாக ரஜினி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால், தன் அண்ணன் சத்யநாராயணா மற்றும் குடும்பத்தாரிடம் அது குறித்து பேச, உடல்நலன் சீராக, திருவண்ணாமலையில் யாகம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மா.செ சண்முகத்துக்கு ரஜினி தரப்பில் இருந்து யாகம் குறித்து தகவல் கூறப்பட்டதும், அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியரான ரமேஷ் மூலம் ஏற்பாடுகளை செய்தார் சண்முகம். கோயிலுக்குள் யாகம் நடத்த தற்போது அனுமதியில்லை என்பதால் முன்னோர்களுக்கு திதி தரும் ஐயங்குளம் எதிரேயுள்ள அருணகிரிநாதர் கோயிலில் யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 9ந் தேதி மதியம் சத்தியநாராயணா, அவரது மகன் ராமு, மருமகள் சீத்தா லட்சுமி திருவண்ணாமலைக்கு வந்தனர். ரமணாஸ்ரமம், விசிறி சாமியார் ஆஸ்ரமம் எனச் சென்றவர்கள், டிசம்பர் 10ந்தேதி காலை அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். பின்னர் 10 சிவாச்சாரியர்கள் 1 மணி நேரம் நடத்திய மிருத்தியுஞ்ஜெய யாகத்தில் சத்தியநாராயணா குடும்பத்துடன் கலந்துக்கொண்டார்.
பின்னர் சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் பேசும்போது, ""திராவிட கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவுங்களுக்கு இது இறுதிகாலம். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படும். கட்சி பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் அனுமதி கிடைத்ததும் கட்சி பதிவு செய்யப்படும்'' என்றார்.
இந்த யாகத்துக்கு பின்பு ரஜினி திருவண்ணாமலையில் போட்டியிடப்போகிறார் என்கிற தகவல்கள் தீயாய் பரவியது. இதுகுறித்து ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் நாம் பேசியபோது, ""தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்தெல்லாம் இன்னும் தலைவர் முடிவு செய்யவில்லை. கட்சி தொடங்கி, தனிப்பட்ட வலிமை, கூட்டணி வலிமை எல்லாவற்றையும் கணக்கிட்டுத் தான் செயல்படுவார். ஆனால் டெல்லியில் இருந்து அவரிடம் வேறுவிதமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள்'' என்றார்கள்.
பா.ஜ.க.வை சேர்ந்த டெல்லியோடு தொடர்பில் உள்ள நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ""தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலங்கானாவில் காங்கிரஸ் காலி செய்யப்பட்டுவிட்டது. கர்நாடகா, கேரளாவில் ஓரளவு காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் அங்கும் இருக்காது. கேரளா, கர்நாடகாவைவிட தமிழகத்தில் செல்லாக்காசான காங்கிரசுக்கு உயிர் கொடுத்து வைத்திருப்பது தி.மு.க.வுடனான கூட்டணிதான். காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டிவிடச் சொல்லி பலவிதங்களில் அழுத்தம் தந்தும் தி.மு.க. தலைமை அதனை ஏற்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் தென்னிந்தியாவில் காங்கிரஸை உயிர் பிழைக்க வைத்துவிடும். அது தேசிய அளவிலான பா.ஜ.க. எதிர்ப்பு கூட்டணிக்கு வலு சேர்த்துவிடும். அதனால்தான் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என நாங்கள் நினைக்கிறோம்.
தி.மு.க.வை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காகத்தான், கடந்த மாதம் வரை அரசியலுக்கு வரத் தயங்கிய ரஜினியை களத்துக்கு இழுத்து வருகிறோம். நக்கீரனில் ஏற்கனவே எழுதியபடி இந்த தேர்தல் களத்தை ஸ்டாலின் - ரஜினி என மாற்றவுள்ளோம். அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்திருந்தாலும், கூட்டணி சார்பில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக நிறுத்திட வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். ஓ.கே. எடப்பாடி தயக்கம். சசிகலாவிடம் பேசப்பட்டு வருகிறது. பிடி கொடுக்காவிட்டால் வேறு வகையில் கையாள்வோம்'' என்றார்.
ரஜினி முதல்வர் வேட்பாளர் என்கிற திட்டத்தை அ.தி.மு.கவும் சசிகலாவும் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் இரண்டாவதாக மற்றொரு திட்டத்தை கையில் வைத்துள்ளது பா.ஜ.க.. அதாவது, பா.ஜ.க. அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை சந்திக்கும். அந்த கூட்டணியில் ஒரு சில கட்சிகள் மட்டுமே இடம்பெறும். வடமாவட்டங்களில் மட்டும் ரஜினி தரப்பு கவனம் செலுத்துவதுடன், வடதமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் ரஜினி போட்டியிடுவது பற்றியும் பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளதாம். வடதமிழகத்தில் தி.மு.க பலமாக இருப்பதால்தான் இத்தனை வியூகங்கள். அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள், தி.மு.க.வுக்கு பதில் ரஜினிக்கு போகும். இதன் மூலம் ஓட்டுகள் சிதறும். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது'' என்கிறார்கள்.
தேர்தல் திட்டமிடல், தேர்தல் செலவுகளை கவனிக்க தேசிய பா.ஜ.க.விற்குள் சாணக்கியன் என வர்ணிக்கப்படும் பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பியாக உள்ள புபேந்தர் யாதவ்வை களமிறக்க ஆலோசிக்கிறது பா.ஜ.க. தலைமை. இவர் குஜராத், பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான் மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர். அவரை நியமிக்கும் பட்சத்தில் ஜனவரி இறுதியில் தமிழகம் வந்து வேலைகளை கவனிப்பார் என்றார்கள் பா.ஜ.க. தரப்பில்.