நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜனநாயகத்தின் மீது ஒரு அதிரடி தாக்குதலை நடத்த மோடி-அமித்ஷா கூட்டணி திட்டமிட்டு காய்களை நகர்த்துவதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்த நடவடிக்கையில் தொடங்கி இந்தியாவை ஒற்றுமைப்படுத்த இந்திதான் ஒரே மொழி என்கிற அமித்ஷாவின் குரலைத் தொடர்ந்து அடுத்த தாக்குதலை நடத்துவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது பா.ஜ.க. அரசு.
தேசத்தை முழுமையாக இந்துத்துவாமயமாக மாற்றும் பல திட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரால் ரகசியமாக கட்டமைக்கப்பட்டு வரும் சூழலில், பா.ஜ.க. அரசியலை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், சிறுபான்மையின மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகள் என அனைவரையும் ஒடுக்கும் வகையில் பல சட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றும் திட்டத்தில் இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள், "நாடாளுமன்றத் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை தந்தது மோடி அரசு. அதில் மிக முக்கியமானது காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவோம் என்பதுதான். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை அண்மையில் திடீரென நீக்கினார் அமித்ஷா.
காஷ்மீரத்தில் மையம் கொண்டிருக்கும் பயங்கரவாத சூழ்நிலையையும், தீவிரவாத குழுக்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் ஆதரவான நிலைப்பாட்டில் காஷ்மீர் அரசு இயங்கி வந்ததையும் சுட்டிக்காட்டி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கான காரணமாக இதனை விவரித்தனர். அமித்ஷாவின் இந்த அதிரடிகள் பல அதிர்வுகளை ஏற்படுத்தின. பா.ஜ.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் அமித்ஷாவின் அந்த பாய்ச்சலை எதிர்த்தன; கண்டித்தன. தேசமெங்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான கண்டனங்கள் எதிரொலித்த நிலையில் சர்வதேச நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த சட்டத் திருத்தம்.
பாகிஸ்தானும் இதனை கண்டித்ததுடன், இந்தியாவிலுள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 17 கட்சிகள் மோடி அரசை கண்டித்து போராடுவதாக சர்வதேச அரசியலுக்கு கொண்டுபோனது. பாகிஸ்தான் ஊடகங்களும் இதனை ஊதி பெரிதாக்கிய நிலையில், சர்வதேச நாடுகளின் துணையுடன் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க காய்களை நகர்த்தியது பாகிஸ்தான். அதனை சாதுர்யமாக கையாண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு.
காஷ்மீர் விவகாரத்தில் எழுந்த எதிர்ப்புக்குரலை அடக்கிவிட்டாலும் அதில் முழு திருப்தி மோடி அரசுக்கு கிடைக்கவில்லை. இனி அடுத்தடுத்து பா.ஜ.க. கொண்டு வர திட்டமிட்டிருக்கும் திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்க்கின்ற நிலை அழுத்தமாக உருவாகும். அப்படிப்பட்ட நிலை உருவானால் சர்வதேச நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகலாம் என யோசித்துள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள்.
குறிப்பாக, காஷ்மீரத்தில் ராணுவத்தை நீண்ட நாட்களுக்கு நிலை நிறுத்த முடியாது. ஒரு கட்டத்தில் ராணுவத்தை முற்றிலும் விலக்கிக் கொண்டாக வேண்டும். அப்படி விலக்கிக்கொள்ளப்படும் போது, மோடி அரசுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அரசியல்கட்சிகள் நடத்தும். மோடி அரசை எதிர்க்கும் மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து மோடி, அமித்ஷாவுக்கு எதிராக குரல் எழுப்புவார்கள். காஷ்மீர் பிரச்சனைகளுக்காக மட்டுமல்லாமல் இந்துத்துவா கொள்கைகளை நிலைநிறுத்த கொண்டு வரும் மற்ற சட்டங்களையும் எதிர்ப்பார்கள்.
அதனால், இதனை ஒடுக்குவதற்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதம் பேசுதல், மேடையில் முழங்குதல், தேசத்தின் பாதுகாப்பு விவகாரங்களை கேள்வி எழுப்புதல், இந்தியாவின் நிலம் சார்ந்த எல்லை விவகாரங்களில் எதிர்மறை விமர்சனங்களை முன்னிறுத்துதல் என இனி யார் பேசினாலும் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் தேர்தலில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் போட்டியிடாத வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவது என யோசித்திருக்கிறார்கள்.
தவிர, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பேசினால் அவர்களது பதவி பறிக்கப்படுவதுடன் அவர்களும் அடுத்த 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டம் கொண்டுவரவும் அவர்களின் ஓட்டு உரிமையை ரத்து செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதைத்தவிர, சிறுபான்மையினருக்கு எதிராக மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவும் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய அதிரடி தாக்குதல்கள் அடுத்தடுத்த நாடாளுமன்ற கூட்டங்களில் நிறைவேற்றப்படலாம். இதனையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி மக்களுக்கு வேண்டும்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.