தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எந்தக் குழப்பமும் இருக்கக்கூடாது என தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை, தொகுதிகள் ஆகியவைகளை ஜனவரிக்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுவிட வேண்டும் என தீர்மானித்திருந்தன. ஆனால், இதுநாள்வரை இரண்டு கூட்டணிகளிலும் இழுபறியே நீடிக்கிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சிகளாக பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகியவை இருக்கின்றன. த.மா.கா.வை பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்கும் முடிவில் இருக்கிறது. அதே சமயம் தேமுதிகவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எடப்பாடி பழனிசாமி. அதனால் பாஜக, பாமகவுடனான ரகசிய பேச்சுவார்த்தையை மட்டுமே நடத்துகிறது அ.தி.மு.க.! இந்த இரு கட்சிகளைச் சம்மதிக்க வைத்த பிறகே தேமுதிகவைப் பார்ப்போம் என சீனியர்களிடம் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதி.மு.க. கூட்டணியில் நடப்பது என்ன என்று மேல்மட்டத்தில் விசாரித்தபோது, அ.தி.மு.க. கூட்டணியைப் பா.ஜ.க. உறுதிப்படுத்தியிருந்தாலும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என எந்த உறுதியையும் பாஜக தலைமை தரவில்லை. சீட் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த யுக்தியை அவர்கள் கையாண்டு வருகிறார்கள். அதனை உடைத்து, தன்னை முதல்வர் வேட்பாளராக பாஜகவை ஏற்றுக்கொள்ள வைக்கும் யுக்தி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதற்கான வியூக முயற்சிகள் தனி ட்ராக்கில் ரகசியமாக நடந்து வருகிறது.
அதேபோல, கூட்டணியில் இரண்டாவது இடம், அதிக தொகுதிகள், தேர்தல் செலவுகள் ஆகியவற்றை முன்னிறுத்தி கூட்டணியைப் பேசுகிறது பாமக. இதற்காகத்தான் இட ஒதுக்கீடு பிரச்சனை மூலம் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி தருகிறார் டாக்டர் ராமதாஸ். இதுகுறித்து அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் ராமதாசுடன் தைலாபுரத்தில் நடத்திய இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலும், 20 சீட்டுகள் தருகிறோம்; தேர்தல் செலவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்காத பாமக, 35 சீட்டுகள் வேண்டும்; தேர்தல் செலவுக்கான தொகையை எங்களிடமே தர வேண்டும் என வலியுறுத்தியது. இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால், தங்களின் அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க கட்சியின் நிர்வாக குழுவை 31-ந்தேதி கூட்டுவதாக அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்.
இதனையடுத்து, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோருடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, அதிக தொகுதிகளையும் கொடுத்து இடஒதுக்கீடு கோரிக்கையையும் ஏற்றால் பாமகவுக்கு லாபம். அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம்? எனக் கேட்டார். அதற்கு அமைச்சர்கள், ராமதாஸின் கோரிக்கையை ஏற்பதை விட, அவர்களைக் கழட்டிவிடுவதே நல்லது எனத் தெரிவித்தனர். ஆனாலும் பாமகவை வைத்திருந்தால்தான் கூட்டணி வலிமையாகத் தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு கணக்குகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, வேலுமணி ஆகியோரை 30-ம் தேதி தைலாபுரத்திற்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
அந்தச் சந்திப்பில், ‘தமிழகத்தில் 24 சதவீதமும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 75 சதவீதமும் வன்னியர்கள் இருக்கும் நிலையில், நாங்கள் தனி இடஒதுக்கீடு கேட்பது எப்படி தவறாகும்? தனி இடஒதுக்கீடு கொடுக்க உடனடி சாத்தியமில்லை என இப்போது சொல்றீங்க. அப்படின்னா உள் இட ஒதுக்கீட்டில் அதிகபட்ச சதவீதத்தை ஒதுக்கலாமே? அதாவது, 16 சதவீதம் தருவது சரியானது. இதைக்கூட செய்யலைன்னா எப்படி? இது சாதி பிரச்சனை இல்லை. சமூகப் பிரச்சனை’ என சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.
இதனை ஆமோதித்துள்ள அமைச்சர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உறுதி தருகிறோம். அதேபோல, 25 சீட்டுகள் வரை கொடுக்கிறோம். இதுகுறித்துப் பேச ஒரு குழுவை அமையுங்கள். இரு தரப்பும் பேசி சுமுகமாக இறுதி செய்வோம் என சொல்ல, அதனை ராமதாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் திருப்தியுடன் சென்னைக்கு திரும்பியுள்ளனர் அமைச்சர்கள். இரு தரப்பும் சென்னையில் பேசுவதற்காக பிப்ரவரி 3-ம் தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சுமுகமான தீர்வு காணப்படும். அதேபோல, பாஜகவை 20 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ள வைக்க கடைசிகட்ட முயற்சிகளை எடப்பாடி பழனிசாமியின் டெல்லி லாபிகள் எடுத்து வருகின்றன. “பாமகவை இறுதி செய்துவிட்டால் மற்றவை எல்லாமே ஈசிதான்'' என்கிறார்கள்.
அதேசமயம், நேரடி அரசியலில் இல்லாத தனது நெருக்கமான நண்பர் ஒருவரை 28-ம் தேதி தோட்டத்துக்கு அனுப்பியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தச் சந்திப்பில், இடஒதுக்கீடு அல்லாத மற்ற விசயங்கள் பேசி முடிக்கப்பட்டதையடுத்தே அமைச்சர்களை அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி என்கிற தகவலும் அதி.மு.க.வில் சிறகடிக்கிறது.
இந்த நிலையில் 31-ம் தேதி கூடிய பாமக நிர்வாகக் குழுவில், அமைச்சர்கள் தன்னை சந்தித்துப் பேசிய விபரங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர் ராமதாஸ். இடஒதுக்கீடு குறித்து பேச அரசு தரப்பில் அழைத்துள்ளனர். 3-ம் தேதி நடக்கும் அந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். அதன் பிறகு இறுதி முடிவெடுப்போம் என சொல்லியுள்ளார்.
இதற்கிடையே, கூட்டணி பேச்சுவார்த்தைன்னா இழுபறி இருக்கத்தான் செய்யும். அதைப் புரிந்துகொள்ளாமல் பிரேமலதாவும் அவரது மகனும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிப்பதை அவர் ரசிக்கவில்லை. இதுகுறித்து அமைச்சர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "விஜயகாந்த் ஆரோக்கியமாக அரசியல் செய்தபோது தேமுதிகவுக்கு இருந்த செல்வாக்கு அவர்களுக்கு இப்போது இல்லைங்கிற எதார்த்தத்தை அந்தம்மா (பிரேமலதா) புரிந்துகொள்ளாமல் பேசுகிறது'' என கமெண்ட் பண்ணியிருக்கிறார்.
பல்வேறு கணக்குகள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் என கூட்டணி கட்சிகள் ரவுண்ட் கட்டுவதால் கூட்டணியை இறுதிசெய்ய முடியாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறது அதி.மு.க. தலைமை.