தமிழர்கள் இந்துக்கள் அல்ல...
பழ.கருப்பையா நேர்காணல்

இன்னும் தீராத சர்ச்சையாக ஓடிக்கொண்டிருக்கும் 'தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்தார்' என்ற சர்ச்சை, தமிழர்கள் இந்துக்களா, சமஸ்கிருதம் தேவ மொழியா, உள்ளிட்ட பல கேள்விகளுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவை சந்தித்தோம்.
விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதது... அதைத் தொடர்ந்த சர்ச்சைகள்... சங்கர மடம் கொடுத்த விளக்கம்... இதையெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த விஷயத்தில் தமிழ் உணர்வாளர்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழ்நாடே வெறுப்பில் தான் இருக்கிறது. தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காமல் இருந்தால் அதனை அவமதிப்பு செய்வதாக அர்த்தம் என்கிறார்கள். அப்போ தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் எழுந்து நிற்கவில்லை என்றால் அவமதிப்பு தானே? தேசிய கீதத்தை அவமதித்தால் வழக்குகள் பாயும், தமிழ் தாய் வாழ்த்திற்கு சட்டம் இல்லை என்பதனால் தானே நிற்கவில்லை... நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் தமிழ் தாய் வாழ்த்திற்கு மரியாதை கொடுக்காதவர்கள் மீது வழக்குகள் பாயும் என சட்டம் கொண்டு வந்துவிடுவோம். அப்போ என்ன தமிழ்நாட்டை விட்டே போயிடுவாரா? தியானத்தில் இருந்தவர் நினைவாக தேசியகீதத்திற்கு மட்டும் எழுந்து நிற்கிறார். மேடையில் இவரைத் தவிர அனைவரும் எழுந்துநின்று தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செலுத்துகிறார்கள். தமிழ் தெரியாத ஆளுநரும் நிற்கிறார். இவர் என்ன ஆளுநரைவிட பெரிய ஆளா? 7 கோடி மக்களை கொண்டது தமிழ்நாடு. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பதாக இருந்தால் இரு, இல்லையெனில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்காத திசைக்கு சென்றுவிடு.
தமிழ் இனத்தை இந்து மதம் மதிக்கவில்லை என்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சிவபுராணம், சித்தர் வழிபாடு, ஆண்டாள் பாசுரம் போன்றவை எல்லாம் தமிழைத்தான் வளர்கிறது என்று சொல்கிறார்களே? தமிழ் சமயங்கள் ஒருங்கிணைந்து இந்து மதமாக மாறியதா?
நான் சொல்கிறேன் நான் இந்துவே இல்லை. தமிழர் எல்லோரும் இந்துக்கள் அல்ல. தமிழனுக்கு தனியான சமயங்கள் உண்டு. சிவ மதம், வைணவ மதம், முன்னோர் வழிபாடு, முருகன் வழிபாடு, இவை தான் தமிழனுடைய சமயங்கள். இவற்றை ஒருங்கிணைந்த இந்து மதம் என்று எவன் சொன்னான்? பாரதி தான் இந்து என்கிற வார்த்தையையே முதலில் பேசுகிறான். 150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வள்ளலாருக்கு இந்து என்கிற மதம் தெரியாது. இந்து என்பது இசுலாத்திற்கு எதிராக ஒன்றை உருவாக்கியதுதானே? 150 ஆண்டுக்கு முன் தமிழை பாருங்கள் இந்து என்கிற சொல்லே இல்லை. வள்ளலார் சிவ மதம் தானே. வள்ளலார் சொல்கிறார் சமஸ்கிருதம் எனும் கடுமையான மொழியை விட இனிமையான தமிழை தெரிந்துகொண்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறார். காளிதாசனிடம் புதிய சமஸ்கிருத அகராதியை படித்து காட்டினால் புரியாது தெரியாது. ஆனால் வள்ளுவன் இங்கே வந்தால் நான் பேசுவது விளங்கும். எங்கள் மொழிக்கு தொடர்ச்சி இருக்கிறது. உங்கள் மொழிக்கு இல்லை. உங்கள் மொழியை தெய்வ பாஷை என்கிறாய், எங்கள் மொழியை ஈஷ பாஷை என்கிறாய். அதனால்தான் ஈஷ பாஷைக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்கிறார்.

மனிதர்களுக்கு சமஸ்கிருதம் புரியாமல் இருக்கலாம், ஆனால் கடவுளுக்கு புரியும் என்கிறார்களே ?
அவர் கடவுளாக இருந்தால் மக்கள் பேசுவது அனைத்துமே புரியும். இது எங்களுடைய மண், நீ சாப்பிடுவதற்காக வாயை திறந்தபோது நாங்கள் பேச வாயை திறந்துவிட்டோம். உலகத்தின் முதல் மொழி எங்கள் தாய் மொழிதான் என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. சிந்து சமவெளி காலத்தில் இருந்து இந்த சின்ன சங்கராச்சாரியார் வரை மோதல் முடிய மாட்டேங்கிறதே? அப்போது இருந்து இப்போது வரை சமஸ்கிருதம் மேலானது, வேதம் மேலானது என்ற கருத்துக்களை திணித்து கொண்டிருக்கிறீர்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்துசமய அறநிலைய துறை என்பதை மாற்றி திராவிட அறநிலைய துறை என மாற்றவேண்டும். ஏன் என்றால் நாங்கள் இந்துக்கள் அல்லவே. இதற்கு சிறந்த உதாரணம் விவேகானந்தர், பார்ப்பனர் அல்லாதவர். அவர்களுக்கு என்று தனி மதம் இல்லையென்பதால் பார்ப்பனியத்தை கட்டிக்கொண்டனர். அவர் அமெரிக்காவிலே போய் இந்து மதத்தை பற்றிப் பேசி பல பாராட்டுகளை பெற்று வந்தவர். கேரளா திருவனந்தபுரத்தில் பேசும் போது நாம் எல்லாம் இந்துக்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு பார்வையாளராக வந்த மனோன்மணீயம் சுந்தரனார் உடனே நாங்கள் இந்துக்கள் இல்லை, திராவிடர்கள் என்று கூறி விளக்கம் அளித்துள்ளார். இதனை புரிந்துகொண்டு இந்து மதத்தின் பெருமையை பேசாமல் விவேகானந்தர் உரையை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார். என்னுடைய பாட்டனார் ஆறுமுகம் செட்டியார். அவர் அந்த காலத்தில் சிவ மதம் என்று பத்திரம் எழுதியிருக்கிறார். ஏன் இந்து என எழுதவில்லை?
ஏசுவின் தத்துவத்தை வைத்து மனிதர்களை ஒன்று திரட்டுகிறது என்று கிறிஸ்துவ மதத்தை சொல்கிறார்கள், இசுலாத்திலும் நபிகள் நாயகம் இதை செய்ததாகச் சொல்கிறார்கள். அதேபோல இந்து மதம் ஒன்று திரட்டுவது தவறா ?
இந்து என நீங்களே சொல்லாதீர்கள், நான் சொல்ல வருவதை நீங்களே வாங்கிக் கொள்ளவில்லை. நாம் சிவ மதத்தைச் சேர்ந்தவர்கள், சைவ சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் சைவர்கள் என்று சொல், வைணவர்கள் என்று சொல், முருக வழிபட்டாளர்கள் என்று சொல்... ஏன் இந்து என்று சொல்கிறாய்? இந்து என்றால் வேதாந்தம், இந்து என்றால் பார்ப்பன ஆளுமை. ஆகவே நாங்கள் இந்து மதத்தை ஏற்கவில்லை. மொஹஞ்சதாரோ காலத்தில் இருந்தே லிங்கத்தை வழிபடுகிறோம். லிங்கம் என்பது ஆண் குறி என்று ஆதிசங்கரர் பழித்தார். ஞானசம்பந்தர் வேற்று மதமான ஆரிய மதத்தில் இருந்து திராவிட மதத்திற்கு வந்தார். ஆதிசங்கரர் கோபத்துடன் ஆரியனாகப் பிறந்து லிங்கத்தை வழிபடுகின்ற கூட்டத்தை பெருமை படுத்துகிறான் என்று சொல்லி அவரை திராவிட சிசு என பழிக்கின்றார். நான் சொல்கிறேன் உலகிலேயே குறி வழிபாடுதான் தொன்மையான வழிபாடு. நாங்கள் கட்டின கோவிலுக்குள் ஆரியர்கள் நுழைந்தார்கள். பாரதி, தீயினை கும்பிடும் பார்ப்பான் என சொல்கிறானே. நாங்கள் சொல்லவில்லையே. நாங்கள் மூன்று விதமாக வழிபடுபவர்கள் அறிவுடையவர்கள் வெற்றிடத்தை வழிபடுவோம், உருவம் வேண்டும் என்பவர்கள் லிங்கத்தை வழிபடுவோம், முழு உருவம் வேண்டும் என சொல்பவர்கள் கூத்தனை வழிபடட்டும். நீருற்றி பூ விடுவது என்பது திராவிட முறை. எல்லாவற்றையும் தீயில் இட்டு பொசுக்குவது ஆரிய முறை. உங்களுடைய மதம் வேறு, எங்களுடைய மதம் வேறு.

ஆரியத்தைப் பிரிக்கும் நீங்கள் கிறிஸ்துவத்தையும் இசுலாமியத்தையும் சேர்த்துக்கொள்கிறீர்களே ?
கிறிஸ்துவர்களும் இசுலாமியர்களும் திராவிடர்கள்தான். சிவ மதம் வைணவ மாதம் என்று எதுவாக இருந்தாலும் ஜாதி எதுவாக இருந்தாலும், நாங்கள் அடையாளப்படுவது திராவிடராக தான். தமிழை பேசும் இசுலாமியர்களும் கிறிஸ்துவர்களும் திராவிடர்கள்தான். அவர்கள் தமிழ்த்தாய் வழி வந்தவர்கள். திராவிடனாக ஏற்றுக்கொண்டால் உன்னை ஏற்றுக்கொள்ளலாம், நீதான் திராவிடன் இல்லை, ஆரியனாகத் தான் காட்டிக்கொள்கிறீர்கள். இசுலாமியனும் கிறிஸ்துவனும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை தருகிறார்கள், நீ மரியாதை கொடுக்கத் தயாராக இல்லையே? அதுவே உன் மரபு இல்லை என்கிறாயே?
நீங்கள் பெரியாரை ஏற்கின்றவர். அப்போ பெரியார் தமிழ்த்தாய் மீது வைக்கின்ற விமர்சனத்தை ஏற்கிறீர்களா? தமிழ்த்தாய்க்கு நீ மரியாதை செலுத்தினால் தமிழ்த்தாய்க்கு என்ன கொம்பு முளைத்திடுமா என்கிறார் ?
பெரியார் தேசிய சட்டப்புத்தகத்தை எரித்தார், தேசிய கொடியை எரித்தார். இதையெல்லாம் நம்மை இழிவில் இருந்து காப்பாற்றச் செய்தார். பெரியார் கடவுள் வாழ்த்திற்கு எழுந்து நின்றாரே ஏன் ? அவரென்ன கடவுள் நம்பிக்கையாளரா? ஒரு சபை எழுந்து நிற்கிறதே என்று நாகரீகத்தோடு எழுந்து நிற்கிறார். இவருக்கு அந்த நாகரீகம் கூட தெரியவில்லையே? தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்றால் மடத்தின் கவுரவம் குறைந்துவிடும் என்கிறாயே? நீங்கள் குற்றவாளி கூண்டில் ஏறின போது எங்கேபோனது உங்கள் மடத்தின் கவுரவம்? எந்த சங்கராச்சாரியாராவது கொலை வழக்கில் இதற்கு முன் போனதுண்டா? இவர் சென்றாரே... அப்போது அங்கு மரபு உடைக்கப்பட்டதே அதற்கு என்ன சொல்கிறார்கள். நீ தான் ஆரியன், திராவிடன் என்கிற பிரிவினையில் இருந்து 2000 ஆண்டுகளாக வரவில்லை. நாங்கள் உங்களை தமிழர்களாக எப்போதோ சேர்த்துவிட்டோம்.
சந்திப்பு : ஃபெலிக்ஸ்
தொகுப்பு : சந்தோஷ் குமார்