தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (16/09/2020) பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை அந்ததந்த துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதன்படி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்க சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவையும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைப்பதற்கான மசோதாவையும் பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்தார். அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களில் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலம் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா தொழிநுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகிக்கும். அண்ணா தொழில்நுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும்.
திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டது. இனி மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில்தான் பதிவு செய்யமுடியும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் பேரவையில் நிறைவேறியது.
அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ரூபாய் 14 ஆயிரம் கோடிக்கு துணை பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
‘கரோனா நோயாளிகளுக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ரூபாய் 3,359.12 கோடி கூடுதல் தொகை மதிப்பீடுகளில் சேர்ப்பு. கரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 4,218.20 கோடி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள், ஆக்ஸிஜன் வசதிக்கொண்ட படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு ரூபாய் 1,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேளாண்துறைக்கு ரூபாய் 107.40 கோடி அனுமதி. விவசாயிகள் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தினைச் செயல்படுத்த மாநில அரசின் மானியமாக ரூபாய் 316.80 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாட்டை பின்பற்ற ரூபாய் 437 கோடி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க ரூபாய் 82.60 கோடி, தனியார் கரும்பு உற்பத்தி ஆலைகள், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதார விலைக்கான நிலுவைத்தொகை வழங்க ரூபாய் 170.28 கோடி, 5 புதிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூபாய் 646.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.