Skip to main content

அதிகாரங்களின் போட்டிக்கு அறியா உயிர்கள் பலி - சிரியா போரும் பின்னணியும்!

Published on 27/02/2018 | Edited on 27/02/2018

சிரியா உள்நாட்டுப்  போர் நடைபெறும் கிழக்கு கூட்டாவில் கடந்த சில நாட்களில் மட்டும் 500க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் கொன்று  குவிக்கப்பட்டுள்ளனர். கிளோரின் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த செய்தி தற்போது இந்தியாவில் சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடையே பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. போர் என்றால் என்னவென்றே அறியாத பிஞ்சுகளின் உயிரை எடுத்து எதை சாதிக்கப் போகிறார்கள் என்று மனம் பதறுகிறது. பலருக்கு இந்த நாட்டில்  என்ன  நடைபெறுகிறது என்ற கேள்வி எழுகிறது. இதுவரை உள்நாட்டுப் போரால் 11 மில்லியன் மக்கள் வரை இறந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர், உள்நாட்டுப் போர்களில் அதிகமாக மக்களை இழந்துகொண்டு வரும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது சிரியா.

 

syria attack


சிரியாவில் 1970ஆம் ஆண்டிலிருந்து ஹபிஸ் அல் அஸாத் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தார். இவரது ஆட்சியில் தான் சிரியா நவீனமானது. அவரது மறைவுக்குப் பின்னர் அவரது மகன் பஷார் அல் அஸாத், கடந்த 2000ஆம் ஆண்டில் அதிபராகினார். ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரது அண்ணன் பஸ்ஸல் அல் அஸாத் விபத்தில் இறந்துவிட இவர் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். இவர் அதிபரான புதிதில் நம்பிக்கை அளிப்பது போன்றுதான் பேசினார், நடந்துகொண்டார். மக்களுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு புதிய சிரியா உருவாகும் என்று மக்களும் நம்பினர். ஆனால், சில ஆண்டுகளில் இவரது சர்வாதிகார தன்மை, பழைய பாணி ஆட்சி  அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, வறுமை, ஷியா-சன்னி பிரிவினை, வேறுபாடு என மக்கள் அவதிப்பட்டனர்.  2011ஆம் ஆண்டில் "அராப் ஸ்ப்ரிங்" என்று சொல்லப்பட்ட புரட்சி சிரியாவில் வெடித்தது. அராப் ஸ்ப்ரிங், 2010 சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளான அரபு நாடுகளில் இருக்கும் மக்கள், அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களை வஞ்சிக்கும் அரசாங்கங்களை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிப் போக்கின் பெயர். எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் மக்கள் புரட்சி வெடித்து மக்களுக்கு ஏற்றது போல அரசாங்கம் அமைய இருந்தது. லிபியாவிலும் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இதன் தாக்கத்தில் சிரியா மக்களும் தங்களுக்கான ஜனநாயக நாட்டை உருவாக்க நினைத்து களத்தில் இறங்கினர்.

 

Syrian president



2011 மார்ச் மாதம் அராப் ஸ்ப்ரிங் ஆதரவாகக் குரல் கொடுத்து சிரியாவில்  முதல் முறையாக  போராடிய பதினைந்து பேரை சிரியா அரசு சித்ரவதை செய்தது. இதில் பங்குகொண்ட 13 வயது சிறுவனை சித்ரவதை செய்து கொன்றது. பின்னர் சிரியா அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நாடு முழுவதும் பரவ ஆரம்பிக்க, போராட்டங்களில் ஈடுபடும் மக்களை வன்மையாக தண்டித்து கொன்று குவித்தது பஷாரின் அரசு. ஜூலை 2011 ஆம் ஆண்டில் ஆர்மியில் வேலை பார்த்து அரசாங்கத்திற்கு எதிராக மாறியவர்கள், சுதந்திர சிரியா ராணுவம்  ( ஃப்ரீ சிரியா ஆர்மி) என்ற பெயரில் போராட்டத்தில் குதித்தனர். கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தைப் பிடிக்க போராட்டத்தை நடத்தினர். போராட்டங்கள் எல்லாம் ஆயுதம் ஏந்திய போராட்டமாக தொடர்ந்தன. உள்நாட்டு கிளர்ச்சியை  வெளிநாடுகள்  புகுந்து கட்டப்பஞ்சாயத்து செய்து,  அதிகாரங்களுக்கு இடையிலான போராக பெரிதாக்கினர்.  
 

syria attack1


சிரியா நாட்டில் வாழும் மக்கள் பலர் சன்னி இசுலாமியர்களாகவே இருந்தனர். ஆனால் நாட்டை ஆள்பவர்களோ அல்வைத் மற்றும் ஷியா இசுலாமியர்களாக இருந்தனர். பஷார், அல்வைத் பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டில் புரட்சியாளர்கள் அலெப்போ மற்றும்  சிரியாவின் பிற முக்கிய நகரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தலைநகர் டமாஸ்கஸை பிடிக்க விரைந்து கொண்டிருந்தனர். இதில் நடந்த வன்முறையில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். 

முதலில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்குமான உள்நாட்டு போராக இருந்தது பின்னர் பல குழுக்களிடையான பிரச்சனையானது. சிரியா அரசாங்கத்திற்கு உதவியாக ஷியா பிரிவு மக்கள் அதிகம் கொண்டுள்ள நாடுகளான இரான் மற்றும் இராக் நாடுகள், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹெஸ்பொல்லா கட்சி, மற்றும் ரஷ்யாவும் களமிறங்கின. அரசாங்கத்தை எதிர்பவர்களுக்கு உதவியாக அமெரிக்கா,  சன்னி பிரிவு இசுலாமியர்களை அதிகம்  கொண்டுள்ள நாடுகளான  சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் போன்ற நாடுகள் இறங்கின. இது போதாதென்று  தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா இயக்கங்களும்  உள்நாட்டுப் போரில் இயங்கிவருகின்றன. குர்தீஷ் என்னும் ஒரு பிரிவினரும் தனி நாடு கோரிப் போராடுகின்றனர்.

 

syria bombing


தீவிரவாத இயக்கங்கள் உள்ளே நுழைந்ததும் அதிகார வர்க்க நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் தடையின்றி  ஆயுதங்களை  கொடுத்து உதவுகின்றன. 'தீவிரவாதிகளை ஒழிக்க மட்டும் தான் ஆயுதம் தருகிறோம்' என்று அதற்கு நியாயமும் கற்பிக்கின்றன. இஸ்ரேலும் சிரியாவுக்கு உதவியாக இருக்கும் லெபனானின் ஹெஸ்பொல்லா கட்சியை குறிவைத்துத் தாக்கியது. அரசாங்கம் சேமித்து வைத்திருந்த முதல் உதவி, மருத்துவ சேவைகள் போன்றவற்றையும் விமான படைகள் மூலம் தாக்கியது. சமீபத்தில் இந்த மாத தொடக்கத்தில் (பிப்ரவரி 2018) சிரிய எல்லைக்குள் சுற்றி வந்த இஸ்ரேலிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அரசு படை. 2016ஆம் ஆண்டில் இருந்தே துருக்கி படை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவையும், வடக்கு சிரியா பகுதியில் எல்லை ஓரப் பகுதியை வைத்திருக்கும் குர்தீஷ் குழுவையும் பலமுறை தாக்கியிருக்கிறது. இந்த குர்தீஷ்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறது. ஜனவரி 2018 ஆம் ஆண்டில் குர்தீஷ் கைக்குள் வைத்திருக்கும் சிரிய வடக்கு எல்லையோர பகுதிகளை மீட்க துருக்கி, சுதந்திர சிரியா ராணுவம் மற்றும் சிரியா அரசாங்கம் மூன்றும்  தனித்தனியே முயன்று வருகின்றன. சிரிய அரசு, சுதந்திர சிரிய ராணுவம், ஐ.எஸ்.ஐ.எஸ்., குர்தீஷ் என நடக்கும் அதிகாரப் போட்டியில் எதுவும் அறியாத மக்கள் தொடர்ந்து பலியாகின்றனர்.

பிப்ரவரி 2018 ஆண்டு வரை 5.5 மில்லியன் சிரியா அகதிகள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள்தான் சிரியா நாட்டு அகதிகளுக்காக முகாம்கள் அமைத்திருக்கின்றனர். மேலும் சிலர் பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு கணக்கின்படி 60,000 அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு வந்துள்ளனர். சிரியாவின் மக்கள்தொகை இந்த போரினால் மிகவும் குறைந்துள்ளது, போர் முடிந்த பின்னர் இந்த நாட்டை உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றே...

 

syria refugees


சமூக ஆர்வலர்கள் பலர் இந்தப் போருக்குக் காரணம் வேற்றுமை அல்ல வல்லரசு நாடுகளின் தேவை என்கின்றனர். சிரியாவில் சீற்றம் ஏற்படுத்தி எண்ணையை எடுக்க நினைக்கிறது ஒரு நாடு, இந்தப் போரினை நம்பி ஆயுதம் விற்கிறது ஒரு நாடு, தங்களின் பகையை தீர்த்துக்கொள்கின்றன சில நாடுகள். அதற்கு மனித மனதின் வேற்றுமைகள் கை கொடுத்துவிட்டன. ஒரு வீடியோவில், ஒரு குழந்தை 'உங்களை எல்லாம் மேலே இருக்கும் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.  நான் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன்.  கண்டிப்பாக உங்களை எல்லாம் தண்டிப்பார்' என்று காதில் இரத்தம் வழிய, கண்ணீல் நீர் வழிய அப்பாவியாக கதறுவான். அந்தக் குழந்தைக்கு தெரியாது இந்தப் போர்களுக்கெல்லாம் மனிதன் படைத்த கடவுளும் ஒரு காரணம் என்று.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.