ரஜினியின் அரசியல் கொள்கையின் நிறம் காவியாக இருக்காது என நினைக்கிறேன். ஒருவேளை காவியாக இருந்தால், அதை மாற்றிக்கொள்ளாதவரை அவருடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் பேசினார். இந்த நிலையில் மதுரையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆன்மீக அரசியல் செய்பவரிடம் அவர் (கமல்) கூட்டணி வைக்க மாட்டாராம். முதன் முதலில் ஆன்மீக அரசியலுக்கு வித்திட்டது பாஜகதான். காவி அரசியலும், ஆன்மீக அரசியலும் ஒன்றுதான். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும். தமிழகம் பெரியார் மண்அல்ல, பெரியாழ்வார் மண். அண்ணா மண் அல்ல. ஆண்டாள் மண் என பேசினார்.
தமிழிசை பேச்சு குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு கூறியது:-
ஆன்மீக அரசியல் தொடர்பாக ரஜினிக்கு பாடம் எடுக்க முயற்சி செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். இரண்டு பேரும் முன்னெடுப்பது ஆன்மீக அரசியல்தான். ஆகவே யார் யாருக்கு பாடம் எடுக்க முயற்சிக்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல. ஆனால், இது பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண். அண்ணா மண் அல்ல, ஆண்டாள் மண் என்று பேசுவது, அவர் ஒரு எதுகை மோனைக்காக, கவித்துவமாக பேச முயற்சித்திருக்கிறார். சொல்லாடல் அப்படி இருக்கிறதேயொழிய அவர் பேச்சில் எந்த அரசியலும் இல்லை.
தமிழ் மண்ணில் கடந்த காலங்களில் சமூக நீதிக்காக போராடிய பெரியார், காமராஜர் போன்றவர்களுடைய செயற்பாட்டுக் களங்களை அவர் படிக்க வேண்டும்.குழந்தை திருமணத்தை ஒழித்தது, தேவதாசி முறையை ஒழித்தது திராவிட இயக்கம்தான். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். திராவிட இயக்கத்தால் தமிழகம் எவ்வளவோ விழிப்புணர்வு பெற்றுள்ளது. படிக்கவே கூடாது என்று சொன்னவர்கள்தான் இந்துத்துவாவாதிகள். அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் படிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தான் இந்துத்துவாவாதிகள். அய்யா வைகுண்டர், பெரியார் உள்ளிட்டவர்கள் இதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து இந்த மண்ணை ஒரு சமூகநீதி மண்ணாக, பகுத்தறிவு மண்ணாக மாற்றியிருக்கிறார்கள்.
இந்த பின்னணியுடன் திராவிட இயக்க அரசியலை படித்து தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டுமேயொழிய, நானும் கவித்துவமாக பேசப்போகிறேன் என்று எதுகை மோனைக்காக இப்படி சொல்வது அவர் வகிக்கும் தலைவர் பதவிக்கு அழகல்ல. அவர் இன்னும் தமிழ் மண்ணின் பண்பாடு, அரசியலை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை. வேண்டுமானால் அவருக்கு எங்கள் கட்சியின் சார்பாக புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். அதனை படித்துவிட்டு பிறகு அவர் பேசட்டும்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கூறியது:-
இது பெரியார் மண் என்பதால்தான், தமிழிசை அவர்கள் பாஜகவின் மாநிலத் தலைவராகவே ஆகமுடிந்திருக்கிறது. இது பெரியாழ்வார் மண், ஆண்டாள் மண் என்று சொல்வதெல்லாம், ஆன்மீகத்தையும் அரசியலையும் சேர்த்து குழப்புகிற சொல்லாடல். வருணாசிரமத்தால் ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களை கைதூக்கிவிட்டவர் பெரியார். தமிழ்நாடு சமூகநீதியை நோக்கி நடந்தது, நீதிக்கட்சி மற்றும் பெரியார் காலத்திற்கு பிறகுதான். எனவேதான் இதனை பெரியார் மண் என்று அழைக்கிறோம்.
இதற்கு பொருள், இது சமத்துவத்தை நோக்கி நடக்கிற மண் என்பதாகும். இதனை மறுக்கிறவர்கள் மறுபடியும் இது பார்ப்பனர்களின் மண்ணாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். தமிழிசைக்கு அப்படி ஒரு ஆசை இருக்க முடியாது. எனவே இது அறியாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது தன் கட்சியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான தந்திரமாகவும் இருக்கலாம் என்றார்.