சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா கூட்டத்தில் கலந்தகொண்ட திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீ அவர்கள் தமிழ்மொழி தொடர்பாகவும், திராவிட இயக்கம் சாதித்தது தொடர்பாகவும் அனல் பறக்க பேசினார். அவரின் ஆவேசமான உரை வருமாறு, "தற்போது சிறிது நேரம் முக கவச்சத்தில் இருந்து விடுதலை கிடைத்திருக்கின்றது. வரும் ஏப்ரல் மாதம் தமிழக மக்கள் அனைவருக்கும் விடிவுகாலம் பிறக்கும். இது நிச்சயமாக, கண்டிப்பாக நடந்தே தீரும். சேகர் பாபு பேசியபோது கரோனா காலம் முடிந்து கிழக்கு மாவட்டம் சார்பில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம் என்று கூறினார். நானும் அவ்வாறே கூறுகிறேன், கிழக்கில் தானே சூரியன் உதிக்கும். இதை சேகர்பாபு வேறு மொழியில் கூறியதாகவே நான் நினைக்கிறேன். அதனால்தான் உதயநிதி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். உதயசூரியன் இங்கிருந்து தொடங்கும் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கையாக இருக்கிறது.
இங்கு உதயநிதி சொன்ன விஷயங்கள் எனக்கு பலவற்றை ஞாபகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இதே இடத்தில் நடைபெற்ற விழாவிற்கு வந்தபோது அவர் நடித்த படத்தின் பாடலை போட்டார்கள். நான் மேடையில் பேசும்போது சொன்னேன், இனி அவர் வரும்போது திராவிட இயக்க பாடலை போடுங்கள் என்று. என்னுடைய நண்பர்கள் கூட அவர் தவறாக நினைத்துக்கொள்ள போகிறார் என்றார்கள். நான் அவர்களிடம் கூறினேன், அவர் தலைவரின் பேரன் என்று. அய்யா பெரியாரை வைத்துக்கொண்டு ஜெயகாந்தன் ஐயா பெரியாரை விமர்சனம் செய்தார். எல்லோரும் கோவப்பட்டு பேசினார்கள், அதற்கு பெரியார் கூறினார், எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காகத்தானே சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினோம் என்றார். நேற்றைக்கு கூட ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒரு பழைய சம்பவம், நீங்கள் ஆங்கிலத்தை ஆதரிக்கிறீர்களே நீங்கள் என்ன ஆங்கிலேயனுக்கு பிறந்தவனா என்று பெரியாரிடம் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பெரியார், 'யார் யார் யாருக்கு பிறந்தார்கள் என்று அவர்களுடைய அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். இது எனக்கு மட்டும் அல்ல, கேள்வி எழுப்பியவருக்கு பொருந்தும்' என்று பதிலளித்தார்.
மேலும் 'அதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அதை நீங்களே தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது நாம் பொதுப்பிரச்சனையை பற்றி பேச வந்திருக்கிறோம்' என்று பெரியார் கூறினார். எனவே எடுத்து சொல்வதற்கும், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் இந்த மன்றத்தால் முடியும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த அரங்கத்தின் அமைப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியமாக இருக்கிறது என்றார்கள், எனக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. சேகர் பாபு அவர்களை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் இப்படி செய்யாமல் இருந்தால்தான் அதிசயம். அவர் கட்சிக்காக அயராது உழைப்பவர். கழகத்தின் வெற்றியை பார்த்து ரசிப்பவர். இந்த கரோனா காலத்தில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் கஷ்டப்படுவதாக என்னிடம் தெரிவித்தார். என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரிவில்லை என்றாலும், என்னால் ஒரு தொலைப்பேசி அழைப்பு செய்ய முடிந்தது சேகர் பாபுவுக்கு. சேகர் பாபு ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் இருந்த 12 குடும்பத்து உதவி செய்திருந்தார். இதை திமுக என்ற பேரியக்கம் அவர் மூலமாக இந்த காரியங்களை செய்துகொண்டு இருக்கிறது" என்றார்.