திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு.
விவசாயிகளுக்கான கொடையாக திகழ்ந்த இந்த கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ள காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான 'உய்யக்கொண்டான்' எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர்.
பேட்டைவாய்த் தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய். சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
திருச்சி மாநகரில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து திருச்சி காங்கிரஸ் சார்பில் திருச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் 28. 8 .2017 அன்று 05 /78 9 /2017 வழக்கு தொடரப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதற்கு அதிகாரிகள் யாரும் செவி சாய்க்கவில்லை.
மேலும் உய்யக்கொண்டான் வாய்க்காலை இதனால்வரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் இருப்பதற்கு பணியை காரணம் காட்டி கொண்டிருக்கின்றார்கள் அதிகாரிகள்.
1.9. 2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றில் நீதி அரசர், திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் எந்தெந்த இடத்தில் கழிவு நீர் கலக்கிறது என்ற விளக்கத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதே கோரிக்கையை முன்வைத்து கடந்த 28. 8. 2017 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சார்லஸ் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அதற்கு பதில் அளிக்க இந்த அரசு கட்டமைப்பு முன்வரவில்லை.
ஏன் இவ்வளவு மெத்தனம் என்று தெரியவில்லை அரசும் அதிகாரிகளும் நீதிமன்றத்திற்கு உடனடியாக உண்மையை தெரியப்படுத்த வேண்டும். மேலும் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெற்ற தகவல்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொன்மலை கோட்டம் நீதிமன்றம் பாலம் அருகே உள்ள உய்யக்கொண்டன் வாய்க்காலில் 11 அடுக்குமாடி கட்டிடத்தின் கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதாக தெரிவித்து உரிய நடவடிக்கை தொடருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்பேரில் சுகாதார அலுவலரின் அறிக்கையின்படி கோர்ட் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால், ரயில்வே ஜங்ஷன், திரையரங்கு ரோடு, DCTC டிப்போ, வருமானவரி அலுவலக பின்புறம், அலெக்சாண்ட்ரியா ரோடு, இராணுவத்தினர் குடியிருப்பு , ஐயப்பன் கோவில் வழியாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. அதில் அப்பகுதியில் வரும் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் வாய்க்காலில் கலக்கிறது என்ற விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை எனக்கு பதில் அளித்துள்ளது. என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட, மாவட்ட பொது செயலாளர் சார்லஸ் கூறுகிறார்.
‘நடந்தாய் வாழி காவேரி’ என்று காவிரியின் பெருமை பேசும் திருச்சி காவிரியில் ஒரு பிரிவாக உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுகள் கலந்து நீரை மாசு கலந்து கொண்டிருப்பதை தடுக்க எப்பொழுது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கப் போகிறது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு உய்யக்கொண்டான் வாய்க்காலையும் காவேரியையும் காப்பதாகவும் தண்ணீர் நிலம் மாசடைவதை தடுப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் இது குறித்து வழக்கு 28 .8 .2017 அன்று 05/789/2017 என்ற வழக்கும், தொடர்ந்து உய்யக்கொண்டானை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம் 30 .4. 2018 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
உய்யக்கொண்டான் சென்னை கூவம் போல் மாறி வருகிறது. கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கழிவு நீர் கலக்கிறது என்றும் அது தடுக்கப்படும் என்றார். ஆனால் தற்போதுவரை அதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே தற்போது உள்ள நிலை.