கடந்த மாதம் 29-ஆம் நாள் கண்ணகி பெருவிழாவானது தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைமை சார்பில் நடந்த கண்ணகி பெருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். அப்போது அரசியல் மற்றும் தமிழ் தேசியம் மலரவேண்டிய அவசியம் பற்றி பேசினார், இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்.
அப்போது சீமான் பேசுகையில்,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார். பயிருக்கும் உயிர் இருக்கு என்று வாடினார் அதனால்தான் தான் விதைத்த பயிர் வாடியவுடன் வரப்பிலிருந்து வேலைபார்த்த வேளான்குடிமகன் மரத்திலே வேட்டியை கயிறாக கட்டி தொங்கி இறந்துபோறான். தமிழர்களின் உயிர்மைநேயதிற்கு சான்று பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மறைமலை சொன்ன வாக்கு. இதை வேதம் கற்பிக்கவில்லை ஆனால் என் முன்னோன் பாடினான் பிறப்பு ஒக்கும் எல்லா உயிருக்கும் என்று. பகுத்துண்டு பல் உறவுகள் ஓம்புக என்று தமிழ்மறை கற்பிக்கவில்லை பகுத்துண்டு பல் உயிர் ஓம்புக என்று பாடுது. எல்லா உயிர்களுக்கும் உணவளி என்று சொன்னது தமிழினம்தான். பாரி வந்து முல்லைக்கு தேர் கொடுத்தான் அது பைத்திக்காரதனம்தான் தேரை விட்டுட்டுபோயிருக்க கூடாது குச்சியை நட்டு முல்லைக்கொடியை காத்திருக்கலாம் ஆனால் இங்கு பார்க்கவேண்டியது அந்த தேருக்கும் மேலாக தெரிகின்ற பாரியின் உயிர்மைநேயத்தைதான். பேகன் மயிலுக்கு போர்வை கொடுத்தான் என்றால் அதில் தெரிவது உயிர்நேயம் தமிழர்களின் உயிர்நேயம். எல்லாரும் கல்லுமாவில் கோலம் போட்டுகொண்டிருந்த நேரத்தில் ஈயும்,எறும்பும் பசியாற்ற வேண்டுமென்று அரிசிமாவில் கோலம் போட்டவர்கள் நாம். ஈயிற்கும் எறும்புக்கும் உயிர் இருக்கு அவைகளுக்கும் உணவளிக்கவேண்டும் என நினைத்தவன்தான் தமிழன்.
ரஜினிகாந்த் ஒரு பச்சைத்தமிழனா... யாரோ ஒருவன் பெயிண்ட் அடிச்சி விட்டுட்டான் போல. சொந்த இனத்திற்கே உண்மையா இல்லாதவர் வேறு எந்த இனத்துக்க உண்மையாக இருப்பார். என்னை எங்க கொண்டு நிறுத்தினாலும் நான் சொல்லுவேன் என்னை அடித்து உதைத்தாலும் சொல்லுவேன் நான் தமிழன் என்று. நீங்கள் இனம் மாறுவது எங்களோடு வாழ்வதற்கா? இல்லை எங்களை ஆள்வதற்கா? என்னோடு வாழ்வதற்கு நீ நீயாகவே இரு. தமிழர்கள் மனிதநேயவாதிகள் அல்ல தமிழர்கள் உரிமைநேயர்கள். தமிழர்கள் போல உயிர்மைநேயம் கொண்டவர்கள் உலக வரலாற்றிலேயே இல்லை.
என் பெரும்புலவன் பாரதி சொல்லும்போது ''காக்கை குருவியும் எங்கள் சாதி நீர்கடலும் மலையும் எங்கள் கூட்டம்'' என்று சொல்கிறான். காக்கையும் குருவியும் நம்ம சாதிதாண்டா அப்படி வாழ்ந்த ஒரு கூட்டம் சகமனிதனை எப்படி வெறுப்போம் என்பதை நினைத்து பார்க்கவேண்டும். டென்மார்க்கில் வழும் தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசு உங்கள் தாய்மொழியை மறந்துவிட்டால் உங்கள் இனம் அழிந்துவிடும் என்று 32 பள்ளிக்கூடங்களை கட்டிக்கொடுத்துள்ளது. தமிழ் கற்பியுங்கள் என பள்ளிகூடம் கட்டி ஆசிரியர்பணிக்கு ஆட்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் வேற தருகிறது அந்தநாடு. அதை நாங்க இங்க செய்யமாட்டோமா.
நீ என்னவாக இருக்கிறாயோ அந்த அடையாளத்தோடு,மொழியோடு, கலை பண்பாட்டோடு வா ஆனா என்னை ஆளவேண்டும் என்று மட்டும் நினைக்காதே. என் தம்பிமார்கள் குறிப்பிட்டது போல நாம் தமிழர் கட்சியின் அரசியல் எல்லாம் உயிர்களுக்குமானது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் இந்த மண்ணில் வாழக்கூடிய எல்லா மக்களுக்குமானது. தலைமை அதிகாரம் எப்போதும் மக்களுக்கானது. என் தாய்மொழி சாவதை பற்றி கன்னடர்கள் கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் மொழி, பண்பாட்டுமரபை காப்பாற்ற அவர்களுக்குகென்று ஒரு மாநிலம் இருக்கிறது. என் தாய்மொழி சாவதை பற்றி மலையாளிகள் கவலைப்படமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அவர்களுடைய மொழியை காப்பாற்ற ஒரு மாநிலம் இருக்கிறது. என் மொழி சாவதை பற்றி மராட்டியருக்கும் பீகாரியருக்கும் கவலை இருக்காது ஆனால் நான் கவலைப்படுவேன். தமிழனுக்கு ஒரு இடம்தான் இருக்கு இதை விட்டுவிட்டால் நாம் மீள்வதற்கும் மக்களோடு வாழ்வதற்கும் நமக்கு வாய்ப்பில்லை. எல்லோரும் ஒருதாய் பிள்ளைகளாக கூடி வாழ்வோம் ஆனால் தமிழர்கள்தான் தாய் நிலத்தை ஆள்வோம். வாழும் உரிமை எல்லோருக்கும் உண்டு ஆனால் ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டும் தான் உண்டு.
அறத்தின் வழியில் நின்று ஆள்கின்ற ஆட்சியே வேண்டும் என் தமிழ் நிலத்தில், அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என இளங்கோ பெருந்தகை பாடியது போல எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி கூர்ந்து கவனிக்க வேண்டும் உறவுகளே எங்கள் நாட்டில் எங்கள் ஆட்சி என்று பதிவு செய்யவில்லை ''எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சி''. தமிழனிடம் கொடுத்துப்பாரு ஒரு ஐந்து ஆறு வருடம் அப்படி விட்டுபாரு என்ன நடக்குது என்று பாரு. உலகத்தின் தலைசிறந்த நாடாக பூமியின் சொர்க்கமாக என் தாயகம் புகழ்படைக்குமா என்று பாரு. தொலைக்காட்சி விவாதத்தில் யார் யார் எல்லாம் தமிழன் என்றால் என்ன அர்த்தம் தமிழர் யார் என்று தெரியாமல் நம்மை ஆக்கிவிட்டார்கள் என்றும் அர்த்தம். நீ முல்லைப்பெரியாற்றில் தண்ணி கேளு மலையாளிக்கு தெரியும் யார் யார் தமிழனென்று சரியாக அடிப்பான். காவிரியில் தண்ணி கேளு அங்கு வாழும் தமிழர்களை தேடி சரியாக அடிக்கிறான். அப்ப அவனுக்கு தெரியுது யார் தமிழனென்று நமக்கு தெரியவில்லை யாரு தமிழன் என்று நக்கல், கேலி, கிண்டல்.
திராவிடர்கள்தான் தமிழர், தமிழர்தான் திராவிடர்கள், தமிழர்கள் ஏன் திராவிடர்களாக வேண்டும் தமிழர்கள் தமிழர்களகளாவே இருக்கவேண்டும். தமிழர் என்ற சொல்லே திரிந்து திராவிடர் என்றானது, திரிந்த பாலையே நாங்க பயன்படுத்தவில்லை திரிந்த சொல்லை ஏன் பயன்படுத்தனும். நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை நாங்கள் தமிழர்கள் என்றுதான் முன்வைக்கிறோம் ஆனால் அதற்கு எவ்வளவு பேர் வெந்நீரை காலில் ஊத்தி கொண்டு குதிக்கிறான். தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டுமா... தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டுமா... ஆமாண்டா தமிழர் தான் ஆள வேண்டும். தமிழர் நாட்டை தமிழன் ஆள்வதுதான் தமிழ்நாட்டின் தேசிய உரிமை. தமிழ் நாட்டை யார் வேண்டுமானலும் ஆளலாம் என்பது தேசியம் அல்ல அது வேசியம் அதை ஏற்கவே முடியாது. எனக்கு தாயும் ஒன்றுதான் என் தாய்நாடும் ஒன்றுதான். அப்பா சரியில்லை என்றால் வீட்டுல மூத்தவன் இருக்கான் குடும்பத்தை காப்பாத்தி கொண்டுபோவான். அதற்காக அடுத்த வீட்டுக்காரன என் வீட்டில வைக்க முடியாது, அது மனங்கெட்ட செயல். செத்தாலும் சாவானே தவிர அடுத்தவன் காலை நக்கி பிழைக்கிற ஈனப்பிழைப்பை தமிழ்மகன் ஒருபோதும் செய்யமாட்டான். கழுத்தை அறுத்துக்கொண்டு சாவானே தவிர அப்படியொன்றை ஒருபோதும் தமிழன் செய்யமாட்டான். சேகுவாரா சொல்கிறான் ஒருவன் காலில் விழுந்து தான் நீ பிழைக்க வேண்டிய நிலை இருந்தால் நீ எழுந்து நின்று இறந்து போ என்கிறான். என் தலைவன் கற்பிக்கிறான் சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேலானது போராடாம இருந்தாலும் இறந்துபோவாய் போராடினாலும் இறந்துபோவாய் ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கு அதானல் போராடியாவது இறந்து போ.
ஹச்.ராஜா சொல்றாரு இந்துதான் தமிழன். இதை எங்கவச்சு ஆராய்ச்சிபண்ணி கண்டுபிடித்தார் என்று தெரியல. அப்ப அமித்ஷா தமிழரா, ஹச்.ராஜா தமிழரா என்று கேட்டா பதிலில்ல ஆவுன்னா நான் கும்பகோணம் போறேன் கும்பகோணம் போறேன்னு இவங்களுக்கு இந்த கும்பகோண களம் ஒன்று மாட்டிக்கிச்சு. நாட்டை ரஜினிகாந்த் கிட்ட கொடு, இல்ல கமல்கிட்ட கொடு இல்ல செயல் தலைவர் ஸ்டாலினிடம் இல்ல தினகரன்கிட்ட கூட நாட்டை கொடுத்துதான் பாரு. நாங்க அப்படியே வேடிக்கை பாக்குறோம். நீ எவ்வளவு வேணாலும் போய் மேயி ஆனா மாட்ட கட்டிப்போட்ட மாதிரி முளைகுச்சி இங்க அடிச்சி வைச்சிருக்கும் அய்யயோ எல்லாம் கொள்ள அடிச்சுட்டாங்களேன்னு கடைசியில எங்கிட்டதான் வந்து நிக்கணும். எங்களை போல் பேரன்பு கொண்டு நேசிக்கிற கூட்டம் வேறு எங்கும் கிடையாது. எல்லா பிரச்சனையை சொல்லுவான் போராடுவான் தீர்வுகாண கூடிய வலிமை, ஆற்றல் எங்களிடம் தான் உள்ளது. காவிரில தண்ணீர் இல்ல எப்படி வரவைப்பது என்று எனக்கு தெரியும். மீனவனை கைது பண்றான் கைது பண்ணமா எப்படி தடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று பேசினார்.