சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக புதிதாக ஒரு கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கப்பட இருக்கிறது. சென்னை நெம்மேலியிலுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தில் இது செயல்பட இருக்கிறது.
இந்த நிலையத்திற்கான அடிக்கல்லை இன்று முதல்வர் எடப்பாடி. பழனிசாமி நாட்டினார். இதன்மூலம் 15 கோடி லிட்டர் நீர் சென்னைக்கு கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே 10 கோடி லிட்டர், இந்த ஆலை தொடங்கப்பட்டால் மேலும் 15 கோடி லிட்டர் தண்ணீர் மொத்தம் 25 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு 20க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கவேண்டும் எனக்கோரியுள்ளார். இவற்றை கேட்கும்போது மிகநன்றாகத்தான் இருக்கும், இதற்குபின் இருக்கும் பேராபத்து புரியாதவரை. என்ன, எது கொண்டுவந்தாலும், என்ன செஞ்சாலும் தப்புனு சொன்னா என்னதான் பண்றது என கேட்கிறீர்களா.
உலகநாடுகளில் மிக அதிகமாக கடல்நீரை குடிநீராக்குவது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்றவைதான். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ள மொத்த நாடுகளில் 55 சதவீதம் அவர்களின் பங்குதான். அவர்களுக்கு வேறுவழி இல்லையென்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதைத்தவிர்த்த மற்ற நாடுகளில் பெரும்பாலனவை இந்த திட்டத்தை கைவிட முடிவெடுத்துள்ளது, அப்படி தொடர்ந்து செயல்படும் இடங்களில் எங்களுக்கு வேண்டாம் என போராட்டம் நடக்கிறது.
அதற்கு பின்னால் காரணம் இருக்கிறது. கடலின் ஆழத்திலிருக்கும் குளிர்ந்த நீரை கடலில் இருந்து நீரை குழாய்கள் மூலம் கடும் விசையுடன் உறிஞ்சும்போது அதில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இழுத்துச்செல்லப்பட்டு சிக்கி இறக்கின்றன. தவிர, லார்வா, முட்டைகள் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் நீரின் விசை மற்றும் அழுத்தத்தால் கொல்லப்படுகின்றன. அதில் கலக்கப்படும் பூச்சிக்கொல்லி, குளோரைடு போன்ற அமிலங்களால் அந்த நீர் உயிர்கள் வாழ தகுதியற்றதாகிறது. மேலும் அந்த நீர் 10 டிகிரி அதிக வெப்பத்துடன் வெளியேற்றப்படுகிறது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும்போது அதில் பாதி கழிவாக வெளியேறும், அது சாதாரண கழிவாக வெளியேறுவதில்லை. பொதுவாக கடல்நீரில் மூன்று சதவீதம் உப்பு இருக்கும், ஆனால் இந்த கழிவில் ஆறு சதவீதம் உப்பு இருக்கும். மேலும், சுத்திகரிப்பின்போது கலக்கப்படும் வேதிபொருட்களும் கலந்து வெளிவரும்.
இதனால் கடல் ஓரத்தின் உப்பு தன்மை அதிகரிக்கும். அதுவே தொடர்ந்தால் அப்படியே குறிப்பிட்ட தூரம்வரை உப்பு அதிகரித்து அந்தப் பகுதி உயிரிழந்த கடலாகும் (dead sea). உயிரிழந்த கடல் என்றால் அந்தப் பகுதியில் எந்த ஒரு உயிரும் வாழாது, அல்லது அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடும். உணவு சங்கிலியின் முக்கிய உறுப்பான நுண்ணிய உயிர்கள் அழியும், முற்றிலும் உப்பு மிகுந்த நீராக மாறும். அது அப்படியே கடல் ஓரங்களில் பரவும், கடலோர மாவட்டங்களின் நிலத்தடி நீர் உப்பாகும். கடலரிப்பு, கடல்வெப்பம் அதிகரிப்பு காரணமாக புவி வெப்பம் அதிகரிக்கும் இப்படியாக பல்வேறு ஆபத்துகள் நிகழும். ஆரம்பத்தில் நீர் கிடைக்கிறது என மக்கள் வரவேற்றாலும், இப்போது எங்கள் வாழ்விடமே நாசமாக போகிறது என போராடி வருகின்றனர். சென்னை நெம்மேலியில் மட்டுமே நொடிக்கு 2000 லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அந்தப் பகுதிகளிலும் மேற்கூறிய விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. அவர்கள் ஏற்கனவே உள்ள நிலையத்தை மூடவேண்டும் என போராடி வருகின்றனர்.
குடிநீருக்கு எந்த வழியும் இல்லாத நாடுகளே அதை வேறுவழியின்றிதான் உபயோகிக்கின்றன. ஆனால் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரண்டு பருவமழைகள், ஆறுகளின் கழிமுகங்கள், ஆறுகள், ஏரிகள், குளம், குட்டை என அனைத்தும் இருந்தும் நாம் இந்த திட்டத்தை கையிலெடுத்ததுதான் வருத்தத்திற்குரிய சூழல். முழு உரிமையுள்ள காவிரி நீரை விட்டுவிட்டு, கிருஷ்ணா, கோதாவரியை பற்றி பேசுவது, நதிநீர் இணைப்பு என மாயைக் காட்டுவது, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்றவற்றை கொண்டுவருவோம் எனக் கூறுவது, புயல்களால் அழிந்த மரங்களுக்கு மாற்றை உருவாக்காமல், எட்டுவழிச்சாலையை கொண்டுவருவோம் என தொடர்ந்து தெரிவிப்பது இவற்றையெல்லாம் விட்டுவிட்டு இயற்கையாக நீரை மீட்டெடுக்க வேண்டும், நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், நீரியல் மேலாண்மை மற்றும் ஆய்வாளர்களின் ஆலோசனைப்படி நடப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ஏரிகளை தூர்வாரி மழை வரும்போது வடிகால் அமைத்து பாதுகாக்க வேண்டும். இப்படியாக பல வழிகள் இருக்கின்றன. அரசு தற்போது எதாவது ஒன்றை செய்தால் போதும் என்றில்லாமல், நீண்டகால திட்டங்களாக வகுத்து, சரியான திட்டங்களை தரமாக அமைத்தாலே குடிநீர் பிரச்சனை தீரும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆகும் செலவும் ஏற்படாது.
சென்னையில் மட்டும் 3,600 ஏரிகள் பயன்பாட்டில் இருந்தன... ஆண்டுக்குச் சராசரியாக 1000 மி.மீ மழை பொழிகிறது...