![ரகத](http://image.nakkheeran.in/cdn/farfuture/hnOuVs__TdWWBfUzrRFwmV9_CyT_poLJiErBeJdZuDQ/1671111792/sites/default/files/inline-images/jl%3B_10.jpg)
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாகத் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் போதைப் பொருட்கள் மிக அதிகமாக அனைவர் கைகளிலும் கிடைக்கிறது. இது மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதுதொடர்பாக தீவிரமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் எனப் பலரும் போதைக்கு அடிமையாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைப் போக்கி அவர்களை நல் வழிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு பள்ளி ஒன்றில் நான்கு மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிய வர அவர்களைக் கண்டித்துள்ளார்கள். இதனால் கோபமான ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். படிக்கும் வயதில் மாணவர் போதைக்கு அடிமையாகி தற்கொலை வரை செல்வது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயரம். அதனை நாம் இத்தனை நாட்களாக அனுமதித்து வந்துள்ளோம். இனியும் காலதாமதம் செய்தோமானால் எண்ணற்ற மாணவச் செல்வங்களை நாம் இழக்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். எனவே நாம் இப்போதே விழிப்புடன் இருந்து அதனைத் தடுக்க வேண்டும்.
அரசியல் கட்சித் தலைவராக இருந்துகொண்டு ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரத்தில் வருவதைப் பற்றி என்னிடம் தொடர்ந்து கேட்கிறீர்கள், இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளிலும் சூதாட்டம் இருக்கிறது என்கிறார்கள். இணையத்தில் அனைத்தும் கிடைக்கிறது. தேவையானவற்றைத் தேவையான அனைவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது வந்துள்ளது. ஏற்கனவே போர்னோ கிராபி பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தியாவில் அதனைத் தடை செய்துள்ளார்களா? இதுவரை ஏன் தடை செய்யவில்லை.
துபாயில் மூன்று முறை அதை ஓப்பன் செய்தால் ஐபி அட்ரசை வைத்து காவல்துறை உங்களைத் தூக்கிச் சென்றுவிடும். அந்த அளவுக்கு நவீன டெக்னாலஜி வந்துள்ளது. ஆனால் இந்தியாவில் அதனைத் தடை செய்ய வேண்டும் என்று யாராவது குரல் கொடுக்கிறீர்களா? ஆன்லைன் ரம்மி தொடர்பாகத் தொடர்ந்து பேசி வருபவர்கள் இது சமூகத்துக்கு கேடு தருவதை அனுமதிக்கச் சொல்கிறார்களா? இதைப் பற்றிப் பேச மறுப்பது ஏன் என்பது தெரியவில்லை.
நான் சொல்லிவிட்டேன் என்று ஆன்லைன் ரம்மி விளையாடச் செல்கிறேன் என்று யாராவது கூறியுள்ளார்களா? நான் மட்டுமா இந்த விளம்பரத்தில் நடக்கிறேன், பலரும் ஏன் இந்தியாவில் பெரிய அளவில் புகழில் இருப்பவர்கள் கூட இந்த விளம்பரத்தில் நடத்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் ஏன் விமர்சனம் செய்யவில்லை என்று கூறுங்கள். என்னை நோக்கியே எப்போதும் கேள்வி எழுப்புகிறீர்கள், அதற்கான நோக்கம்தான் இன்னும் எனக்குத் தெரியவில்லை, என்னைக் குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர இதில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
நான் விளம்பரத்தில் நடித்தால் அதைப் பார்த்துவிட்டு விளையாடுவார்கள் என்றால், எனக்கு வாக்களியுங்கள் என்று பலமுறை கேட்டுள்ளேன், எனக்கு இதுவரை வாக்களித்துள்ளார்களா? வாக்களிக்கப் பணம் வாங்காதீர்கள் என்று கூறியுள்ளோம். ஆனால் அவ்வாறு பணம் வாங்காமல் இதுவரை இருக்கிறார்களா? தனிமனிதனும், அரசாங்கமும் முடிவு செய்ய வேண்டிய இடத்தில் விளம்பரத்தில் நடிப்பவர்களை எல்லாம் குறை சொல்வதை ஏற்க முடியாது" என்றார்.