மணல் என்பது கட்டுமானத்திற்கானதல்ல
-"பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன்

ஐ.நா.வின் அறிக்கையில் இடம்பெறும் அளவிற்கு இந்தியாவில் மணல் கொள்ளை பல தடைகள், சட்டங்கள், கெடுபிடிகள் என அனைத்தையும் மீறி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 2014ம் ஆண்டு அறிக்கையிலும் இது இடம் பெற்றது. தற்போது ஐ.நா. தன் அறிக்கைகளில் உலக அளவில் மணல் தட்டுப்பாடு வரும் என கூறுகிறது. கடந்த வாரம்கூட உயர் நீதிமன்றம் மணல் அள்ளுவதற்கான தடையை நீட்டித்துள்ளது. மணற்கொள்ளை பற்றியும், அதற்கான மாற்று பொருட்களையும் பற்றி கூறுகிறார் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக செயல்படும் அமைப்பான "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன்.
சமீபத்தில் மணல் தட்டுப்பாடு உலகம் முழுக்க கண்டிப்பா வரும் அப்படினு ஐநா அறிக்கை வெளியிட்டுருக்காங்க. அதைப் பற்றி உங்கள் கருத்து
இதைத்தான் நம்மளும் ரொம்ப நாளா சொல்லிட்டு வரோம். உலகம் முழுக்க மணல் தட்டுப்பாடு கண்டிப்பா வரும். மணல், வீடு கட்டுவதற்கான பொருள் இல்லை. அதற்கு எம் சேண்ட் போன்ற நிறைய மாற்றுப்பொருட்கள் இருக்கு. அதுமட்டுமல்ல, மணலின் பயனே வேற. மணல் இல்லைனா நிலத்தடி நீர் இருக்காது. புவி வெப்பம் அதிகமாகும். இப்படி நிறைய பிரச்சனைகள் வரும்.

அந்த மாற்றுப்பொருட்களின் தரம் எப்படி இருக்கும்
கண்டிப்பா மணலைவிட தரமானதாதான் இருக்கும். வெளிநாடுகள்ல இந்த மாதிரி மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி நிறைய கட்டிடங்கள் கட்டிட்டு வராங்க.

ஒரு பக்கம் நீர் விடமாட்றாங்க, இன்னொரு பக்கம் அந்த வறண்ட ஆற்று மணலை திருடிட்டு போறாங்க இந்த இரண்டுக்கும் சம்மந்தம் இருக்கா?
நாம அத அப்படிதான் பாக்க முடியும். இந்த ரெண்டுக்கும் சம்மந்தம் இருக்கு.

கடல் மண் திருட்டு அப்படினு நாம அப்பப்போ செய்திகள் கேள்வி படுறோம். கடல்மண் வீடு கட்டும் அளவிற்கு உறுதியானதும் அல்ல. அப்படி இருக்கும்பொழுது இதற்கான காரணம் என்னவாக இருக்கும்.
கடல் மண் திருட்டுக்கு வேற காரணம் இருக்கு. கடல் மண்ணில் தாதுப்பொருட்கள் அதிகமா இருக்கும். அது அதிக கதிர்வீச்சை தாங்கக்கூடியது. அதனால அதை திருடி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் சில தீவுகள் காணாமல் போயிருக்கு அப்படினு சொல்றாங்களே
ஆமா, மண் அரிப்பு ஏற்பட்டு காணாமல்போகும். சூறாவளி, புயல் ஆகியவற்றை தடுப்பதில் கடல் மண்ணிற்கும் முக்கிய பங்கு இருக்கு. இப்போ கடல் மண் இல்லைனா அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
-கமல் குமார்