"இராமாயண காலத்திலேயே தோன்றியுள்ள இராமநாத சுவாமி திருக்கோயில் 12ஆம் நூற்றாண்டு வரை துறவியின் பாதுகாப்பில் கூரைக்கொட்டகையின் கீழ் இருந்ததாகவும், இலங்கையை ஆண்ட பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னன் தான் கர்ப்பக்கிரகம் கட்டி கோயிலாக மாற்றி வழிப்பட்டான்" என்று திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது என்பதின் மூலம் இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோயில் புதிய சர்ச்சைக்குள் மாட்டியிருக்கிறது.
"ஆனால் உண்மை இது வல்ல. சைவ சமயத்தை அழித்தவன் எப்படி கோயிலைக் கட்டமுடியும்? இக்கோயிலை தமிழ் மன்னன் தான் கட்டியிருக்க முடியும். கோயிலைக் கட்டியதாகக் கூறும் சிங்கள மன்னனின் காலம் 12ம் நூற்றாண்டு. 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் மன்னர்கள் கோயிலில் திருப்பணியாற்றியுள்ளனரே!அப்படியெனில் கோயில் இருந்திருக்கத் தானே வேண்டும்? தமிழர் கட்டிய கோயிலை சிங்களர்கள் கட்டியதாகக் கூறும் தல வரலாற்று தகவல்களை நீக்க வேண்டும். உண்மையான வரலாற்றுத் தகவலை தல வரலாறாக மாற்ற வேண்டு"மென இந்து அறநிலையத்துறைக்கும், தொல்லியல் துறைக்கும் கடிதங்கள் அனுப்பி போராடி வருகிறார் இராமேசுவரத்தைச் சேர்ந்த பக்ஷி ராசன் என்பவர்.
"செய்த பாவத்துக்குப் பரிகாரமாக இராமநாத சுவாமியை வழிபடும் வழக்கம் ராமர் காலத்திலேயே உண்டு. அதனால் தென்னிந்தியாவில் எந்தவொரு மன்னரும், தாங்கள் போரில் வெற்றி பெற்ற பிறகு இராமநாத சுவாமியை வழிபட்டு, தங்கள் பாவத்தைக் கழுவிக்கொள்ள இராமேசுவரம் வருவது உண்டு.. ஆரம்பக் காலந்தொட்டு இந்த வழக்கம் உண்டு. தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழனின் தாத்தா முதலாம் பராந்தகச் சோழன் மதுரையையும், ஈழத்தையும் ஒரு சேர பிடித்ததினால் நிறைய உயிரிழப்பு ஏற்பட்டது. அந்த பாவம் போக்க, இராமேசுவரத்திற்கு வந்து எடைக்கு எடை நாணயம் கொடுத்ததாக வேளஞ்சேரி செப்புப் பட்டயம் சொல்கிறது. இவருடைய காலம் கி.பி.907-953 வரை. அந்தக் காலத்தில் மன்னர்கள் எடை சராசரியாக 80 கிலோ என்றால் நாணயமும் 80 கிலோ வேண்டுமே? கூரைக்கொட்டகையில் கோயில் இருந்தால், எந்த உத்தரத்தில் எடைக்கு எடை நாணயம் கொடுத்திருப்பார்கள்?
கோச்சடையான் தந்தை நின்றசேர் நெடுமாறன் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு. அவரும் தன் பரிவாரத்துடன் தங்கி பூஜை, புனஸ்காரங்கள் முடித்துவிட்டு இங்கிருந்து மதுரைக்குச் சென்றதாக பெரிய புராணத்தில் உள்ளதே! தென்னிந்தியாவை ஆண்ட ராஷ்டிரகூடர்கள் உட்பட அனைத்து மன்னர்களும் வழிபட்ட இராமநாத சுவாமியின் திருக்கோயிலைக் கட்டியது சிங்கள மன்னன் பராக்கிரமபாகு என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுடைய காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. சோழ ஆர்ப்பாக்கம் கல்வெட்டு சிங்கள பராக்கிரமபாகுவின் தளபதி இலங்காபுர தண்ட நாயகனால் கோயில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியெனில் அதற்கு முன் அங்கு கோயில் இருந்திருக்க வேண்டும்! அப்புறம் எப்படி சிங்கள மன்னன் இந்த கோயிலைக் கட்டியிருக்க முடியும்? இந்த கோயிலைக் கட்டியது தமிழ் மன்னனே! சிங்கள மன்னன் அல்ல. இதை தொல்லியல்துறையே ஒத்துக் கொண்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள இராமநாத சுவாமி திருக்கோயில் தல வரலாறை திருத்தி வெளியிட வேண்டுமென்பதே என்னுடைய கோரிக்கை" என்றார் பக்ஷி ராசன்.
பராக்கிரமபாகு யார்..? எப்படிப்பட்டவன்..? என்பதை கூறுகிறது இலங்கையின் இதிகாசமான மகாவம்சம்."சிறந்த பௌத்தவாதி. புத்தரைத் தவிர யாரையும் நம்பாதவன்" என்றும் இலங்கைப் பொன்னலறுவையிலுள்ள கல்வெட்டு,"அசுத்ததை அழித்து பௌத்ததை வளர வைத்தவன் "( இங்கு அசுத்தம் எனக் குறிப்பிடுவது முற்கால சோழர்களால் இலங்கையில் கட்டப்பட்ட சைவ சமயக் கோயில்கள்) என்றும் கூறுகின்றன. இதைத் தான் இலங்கையின் தொல்லியல் துறை நூலான EPIGRAPHIA ZEYLANGA வும் ஒத்துக்கொள்கிறது. இந்த பொன்னலறுவையில் சிங்கள மன்னன் பராக்கிரமபாகுவிற்கு சிலை உள்ளது. வரலாற்றின் படி இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயிலைக் கட்டியது சிங்கள மன்னன் பராக்கிரமபாகு அல்ல. பின் எப்படி வந்தான் தல வரலாற்றிற்குள்?
"இந்த தல வரலாற்றைக் குழப்பியது சிங்கள மன்னன் கீர்த்தி நிசங்கமல்லனின் கல்வெட்டு. இக்கல்வெட்டு இலங்கை தம்புலாவில் காணப்படுகிறது. இரண்டாம் விஜயபாகுவிற்கு பின் ஆட்சிக்கு வந்தவன் பராக்கிரமபாகுவின் மருமகன் கீர்த்தி நிசங்கமல்லன். காலம் கி.பி. 12ம் நூற்றாண்டு. இவன் பராக்கிரமபாகுவின் மருமகனும் கூட. இவன் தன்னுடைய கல்வெட்டில்,"இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்கு துலாபாரம் கொடுத்ததாகவும், இராமேசுவரத்தில் நிசங்கேஸ்வரா என்ற கோயிலைக் கட்டியதாகவும் அதற்காக இராமேசுவரம் முதல் இலங்கை வரை சில தீவுகளைப் பரிசளித்ததாகவும்" மட்டுமே கூறப்பட்டுள்ளது. இன்று வரை நிசங்கேஸ்வரா என்ற கோயில் வரலாறுகளில் கூட காணப்படவில்லை. கீர்த்தி நிசங்கமல்லனின் கல்வெட்டை பராக்கிரம பாகுவின் கல்வெட்டு என்று நம்பிய சிங்களர்கள், காணாமல் போன நிசங்கேஸ்வரா ஆலயத்தை., இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலாகப் பார்த்தனர். இது அவர்களின் வரலாற்றுப்பிழை. அதையே பின்பற்றுவது நம்முடைய பிழை." என்று போட்டுடைத்தார் ஆதிச்சநல்லூர் ஆய்வாளர் ஒருவர்.
தலவரலாறினால் ஒரு தலைவலி...!