நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாகவும், தில்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றியும் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமாரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தற்போது போராட்ட களமாக மாறியுள்ளது. இந்து முஸ்லிம் இடையே பெரிய கொந்தளிப்பு நிலை தற்போது காணப்படும் நிலையில், இந்த போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
உங்களுடைய கேள்வியிலேயே இதற்கான பதில் இருக்கின்றது. அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் தற்போது போராட்டங்கள் நடைபெறுகின்றன. அன்பு மதம் என்று சொல்லப்படுகின்ற என் அருமை இஸ்லாமிய தோழர்கள் யாரையோ ஆட்சி கட்டிலில் அமர்த்த பாடுபாட்டு கொண்டிருக்கிறார்கள். இன்றும் வண்ணாரப்பேட்டையில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி இந்த சிஏஏ சட்டத்தால் எந்த முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுங்கள் என சட்டமன்றத்திலேயே கேள்வி எழுப்பியுள்ளார். அதை போலவே பாரதப் பிரதமர் மோடி அவர்களும் இந்த குடியுரிமை சட்டத்தால் எந்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி தெரிவித்துள்ளார். நாட்டை ஆள்கின்ற இருவருமே இவ்வாறான உறுதி மொழியை கொடுத்துள்ள நிலையில் தற்போது முஸ்லிம் மக்கள் போராட வேண்டிய அவசியம் என்ன. தில்லியில் நடந்த கலவரத்தில் 20க்கும் மேற்பட்ட இந்து சகோதரர்கள் பலியாகியுள்ளார்கள். அமைதி மார்க்கம் என்று சொல்கின்ற இஸ்லாமிய தோழர்கள் ஏன் வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தமிழகத்தில் நீங்கள் கூறுவதை போல எந்த வன்முறையும் நடக்கவில்லையே?
நீங்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நடக்க கூடிய போராட்டமே சட்டவிரோத போராட்டம் என்று கூறுகிறோம். சட்ட வழங்கிய அனுமதிப்படி யார் வேண்டுமானாலும் போராட்டம் செய்யலாம். ஆனால், அந்த போராட்டத்தை கூட, அனுமதியோடு செய்ய வேண்டும். அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது. இங்கே போராடுபவர்கள் எல்லாம் சட்ட விரோதிகள்.
நீங்கள் முஸ்லிம்கள் இந்துக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போகிறார்கள் என்று கூறிவரும் இந்த நிலையில்தான் போராட்டம் நடக்கும் அதே இடத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகின்றது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இதெல்லாம் சிலர் செய்கின்ற வேலை. அங்கே வந்துள்ளவர்கள் நீங்கள் சொல்வது போல இந்துக்கள் தான். அவர்கள் தான் இந்து உணர்வில்லாமல் ஜந்து மாதிரி இருக்கிறார்களே? நாங்கள் இந்துக்களை குறை சொல்லவி்ல்லை. அவர்களிடம் இருக்கின்ற ஒற்றுமை உங்களுக்கு வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
முஸ்லிம்கள் மாதிரி அமைதியாக போராட கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்துக்களை பார்த்து கூறுகின்றீர்களா?
அமைதியாக வண்ணாரப்பேட்டையில் போராடுகிறார்கள், தில்லியில் வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள். தில்லியில் முஸ்லிம்கள் தான் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். இந்துக்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.
தில்லி கலவரம் தொடர்பாக காவல்துறையினரை கண்டித்த நீதிபதி ஒருவர் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது நீதித்துறையின் சாதாரண ஒரு பணி மாறுதல் என்றுதான் பார்க்க வேண்டும். இதற்கும் அரசுக்கு சம்பந்தம் என்று எப்படி சொல்ல முடியும். அவரின் பணி சேவை பஞ்சாப்பிற்கோ அல்லது ஹரியானாவுக்கோ தேவைப்படும். அதனால் அவர் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கு அரசியல் சாயம் பூச தேவையில்லை.
அப்படி என்றால் நீதிபதி லோதா எங்கு பணி மாறுதல் கேட்டார் என்று கூறுங்களேன்?
அதை விடுங்க பிரதர், வேறு நீதிமன்றத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்றுள்ளார் என்ற அளவில்தான் இதனை பார்க்க வேண்டும். இதுதொடர்பாக பேச நான் ஒன்றும் நீதித்துறையின் அதிகாரியோ, நீதிபதியோ கிடையாது. இது சாதாரண பணி மாறுதல். இதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்.
வண்ணாரப்பேட்டை போராட்டத்திலும் தில்லி போன்று நடக்க வாய்ப்பு உள்ளது என்று பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கின்றதா?
வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே சொல்கிறார்கள் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தலிபான்கள் மயமாகி வருகின்றது. குமரியில் எஸ்ஐ வில்சனை கொன்றது யார், முஸ்லிம் பயங்கரவாதிகள் தானே? இப்படித்தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை தலிபான் மயமாக மாற்றி வருகிறார்கள்.
வில்சனை கொன்றது முஸ்லிம்கள் என்றால், காந்தியை கொன்றது யார்?
காந்தியை கொன்றது கோட்சே என்ற நபர்.
காந்தியை கொன்றவர் நபர் ஆகிவிடுகிறார், வில்சனை கொன்றவர் மட்டும் முஸ்லிம் ஆகிவிடுகிறாரா? தீவிரவாதத்துக்கு மதம் இருக்கின்றதா?
நீங்கள் கேள்வியை அறிவாளித்தனமாக கேட்பதாக நினைக்கிறீர்கள், தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்றால் அப்புறம் எதற்கு போராடுபவர்களை சிறுபான்மையினர் என்று கூறுகிறீர்கள். இந்துக்கள் போராடினார்கள் என்றுதானே சொல்ல வேண்டும். அவ்வாறு ஏங்கே நீங்கள் கூறியிருக்கிறீர்கள் என்பதை என்னிடம் காட்டுங்கள்.