
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் என்று அழைக்கப்படுபவர் நந்தனார். இவர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்து ஆதனூரில் பிறந்துள்ளார். பட்டியல் சமூகத்தில் பிறந்த நந்தனார், சிவபெருமான் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். ஒருநாள் மயிலாடுதுறையில் உள்ள ஆதனூரை அடுத்த திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றார். ஆனால் அந்தக் காலத்தில் நிலவிய தீண்டாமை கொடுமைகளால் அவரால் கோயிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. வெளியில் நின்றபடியே வணங்கி விடலாம் என்றால் நந்தி மறைத்து நின்றுள்ளது. சிவபெருமானை தரிசிக்க முடியாத சூழலில், மிகுந்த ஏக்கத்துடன் அழுது புலம்புகிறார் நந்தனார். அப்போது, தன் மீது உண்மையான பக்தி கொண்டிருந்த நந்தனார் தன்னை தரிசிக்க வேண்டி, குறுக்கே நின்ற நந்தியை ‘சற்று விலகி இரும் பிள்ளாய்’ என்று சிவபெருமான் உத்தரவிட்டுள்ளார். உடனே நந்தி சிறிது வலது புறமாக நகர்ந்துகொள்ள, கருவறையில் இருந்த இறைவனை நந்தனார் கண்டு வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இன்றைக்கும் அந்த கோயிலில் நந்தி சற்று விலகியே இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் நீட்சிதான் எனப் பலர் சொல்லுகின்றனர்.
அதைப் போலவே, சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது நந்தனாருக்கு பெரும் கனவாக இருந்துள்ளது. ஆனால், அப்போது இருந்த சாதி கட்டுப்பாடுகளால் நந்தனாரால் பெருமாளை நேரில் சென்று தரிசிக்க முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது. சிதம்பரத்துக்கு நாளைக்குப் போவேன்... நாளைக்குப் போவேன் என்று.. ஒவ்வொரு நாளும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு நடராஜரை மனதிலேயே வணங்கி வந்துள்ளார். அதனாலேயே அவர் திருநாளைப் போவார் நாயனார் என அழைக்கப்பட்டார். பின்னர் ஒருநாள் தீட்சிதர் கனவில் தோன்றிய இறைவன் நந்தனாரை அழைத்து வரச் சொன்னதாகவும் கனகசபையில் ஆடும் நடராஜரை தரிசனம் செய்து இறைவனோடு கலந்துவிடுவதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதில், கோவிலுக்குள் நந்தனார் வந்த தெற்கு வாசல் தற்போதும் தில்லை கோவிலில் மூடப்பட்டுள்ளது. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அவர் வந்த பாதையை அடைத்து வைத்துள்ளனர் என இன்னமும் விமர்சிக்கப்படுகிறது. இது தீண்டாமைச் சுவர் எனப் பல்வேறு தரப்பு மக்களால் ஆட்சேபிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த சுவரை அகற்றியே ஆக வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பல தரப்பு மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழ்த் தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, தில்லையில் சிலர் நந்தனாரை தீயிட்டுக் கொளுத்திவிட்டு பின்னர் இறைவனோடு கலந்துவிட்டதாகக் கூறுகின்றனர் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

நந்தனாரை பற்றிய இந்த முன்கதையை வைத்துக்கொண்டு ஆளுநரின் பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சியை முற்போக்காளர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அக்டோபர் 4ம் தேதி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில், திருநாளைப்போவார் அவதார ஸ்தலத்தில் தமிழ் சேவா சங்கமும், சிவகுலத்தார் அறக்கட்டளையும் இணைந்து நந்தனார் குருபூஜை நடத்தினர். காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நந்தனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பட்டியலினத்தவர்கள் நூறு பேருக்கு உபநயனம் செய்து, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். ஸோகோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாகப் பட்டியலினத்தவருக்கு பூணூல் போடுவதன் மூலம் ஆளுநர் என்ன சொல்ல வருகிறார். பூணூல் போடுவதன் மூலம் அவர்களை உயர்த்திவிடலாம் எனக் கூறினால்; பூணூல் போடாதவர்களை தாழ்ந்தவர்கள் கீழானவர்கள் எனச் சொல்ல வருகிறாரா? ஒருவேளை ஆளுநர் உண்மையிலேயே சமூக நீதி அடிப்படையில் அனைவரும் சமம் என சிந்தித்தால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் போடுவதற்குப் பதிலாக, பூணூல் போட்டிருப்பவர்களை கழட்டச் சொல்லிவிட்டால், அனைவரும் சமமாகி விடலாமே என்கின்றனர் இந்த நிகழ்வை விமர்சிப்பவர்கள்.

மேலும், தில்லை தெற்கு மதில் சுவர் தீண்டாமைச் சுவராகப் பார்க்கப்பட்டு வரும் வேளையில், அதை ஆளுநர் அகற்றி அனைவரையும் அந்த வழியில் அழைத்துச் செல்லத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ஆதனூரில் 100 பட்டியலினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறாராம் ஆளுநர் சனாதனி ஆர்.என். ரவி.
இது மேன்மைப்படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன் ஆளுநர், நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடு தின்னும் புலையன் என இழிவுபடுத்தும் பெரியபுராணக் கட்டுக் கதைகளைப் புறந்தள்ளுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.