கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுங்கட்சியான திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கொடுத்ததாகச் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு,
கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு புகார்களைக் கொடுத்ததாகப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ஆனால் அமித்ஷா தொடர்பாக அவர் பேசியது டெல்லி வரைக்கும் கோபத்தை ஏற்படுத்தியதால் தன் தரப்பு விளக்கத்தை ஆளுநரிடம் அவர் தெரிவித்ததாகவும், இதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அதை எடப்பாடி அரசாங்கம் எப்படி நடைபெற்றது என்பதை ஏற்கனவே தமிழக ஆளுநராக இருந்த பன்வாரி லால் புரோகித் வெளிப்படையாக பஞ்சாபில் தெரிவித்துள்ளாரே? ஒரு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு எத்தனை கோடி வரை வாங்கினார்கள் என்று பன்வாரி லால் தான் மிகத்தெளிவாகப் புள்ளி விவரங்களைத் தெரிவித்துள்ளாரே? இவர் போய் அடுத்தவர் மீது என்ன ஊழல் புகார் தெரிவிக்கப் போகிறார். இவர் செய்த ஊழல்களை எல்லாம்தான் விலாவரியாக முன்னாள் ஆளுநர் அமித்ஷாவிடமும் மோடியிடமும் எப்போதே தெரிவித்திருப்பாரே, இப்போது இவர் என்ன ஆளுநரைச் சந்தித்து புகார் கொடுக்கப் போகிறார்? இவர் மீது இவரே வேண்டுமானால் புகார் தெரிவித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் இல்லீகல் பார்கள் செயல்படுவதாக ஆளுநரிடம் தெரிவித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பழனிசாமிக்கு எது தெரிகிறதோ இல்லையோ இல்லீகல், மர்டர், கொலை இது எல்லாம் நன்றாக தெரியும். அதனை அருமையாக பேசுவார். இதில் அவர் மிகுந்த அனுபவசாலி. அவரின் அனுபவத்துக்கு முன்னால் கூட யாரும் நிற்க முடியாது. சட்ட விரோத பார் தமிழகத்தில் எங்கு நடக்கிறது என்ற ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியதுதானே, பாரில் கொள்ளை அடிப்பதை அதுவும் தங்கமணியை அருகில் நிற்க வைத்துவிட்டுப் பேசுகிறார்.
கரோனா காலத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் வாசலில் கட்டை கட்டி வியாபாரம் செய்தவர்கள் தானே இவர்கள். எத்தனை உயிர்கள் போய்க்கொண்டிருந்த அந்தக் கொடுமையான காலகட்டத்தில் இவர்கள் சரக்கைக் கூடுதல் விலைக்கு விற்றும், மக்களின் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமலும் நடந்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதானே?
எவன் செத்தா நமக்கென்னன்னு சரக்கு வித்துட்டு ஆளுநரிடம் இவர் கம்ப்ளைன்ட் கொடுப்பாராம், இதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாம். இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு யாரும் செய்யமாட்டார்கள். இதை எல்லாம் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அதனால்தான் மக்கள் அம்மா உருவாக்கிய கட்சியையே தோற்கடிக்கக் காரணமாக அமைந்தது.
இவர்களைக் கட்சியினர் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இவர்கள் தயவு செய்து ஊழலைப் பற்றி மட்டும் பேசக்கூடாது. ஒரு ஊழலின் மொத்த உருவமே எடப்பாடி குரூப்தான். எனவே எதைப் பற்றிப் பேசினால் அதற்குப் பதில் சொல்லலாம். ஆனால் அதைப்பற்றி மட்டும் அவர்கள் தயவுசெய்து பேசக்கூடாது என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.