Skip to main content

“நான் சின்னப்புள்ள, ஆனாலும் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்காங்க” - தமிழ்வேந்தன்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Puducherry  ADMK candidate Tamilvendan shared about politics in an interview

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ் வேந்தனை நக்கீரன் சார்பில் சந்தித்து பேட்டி கண்டோம். அப்போது அவர் புதுச்சேரி அரசியல் நிலைகுறித்தும், தங்களது கட்சி குறித்தும் நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டதில் சிறு தொகுப்பை  இங்குக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளோம்...


புதுச்சேரியில் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இருக்கும் போது உங்களை நாடாளுமன்ற வேட்பாளராகத் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன?

2012 ஆம் ஆண்டு என்னைக் கட்சியில் இணைத்துக்கொண்டேன். இந்த நிமிஷம் வரைக்கும் கட்சிக்கு உண்மையாக இருப்பேன். நான் ஒரு அடிப்படை தொண்டன்தான். படிப்படியாகத்தான் கட்சியில் மேலே வந்தேன். இப்போது, மாநில இளைஞர்கள் மற்றும் இளம்பெண் பாசறையில் பதவியில் இருக்கேன். இந்தப் பதவிக்கு வருவதற்கு நல்ல ப்ஃபில்ட் வொர்க் பண்ணிருக்கிறேன். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, தற்போது உள்ள புரட்சி தமிழர் வரை உழைக்கும் வர்க்கத்திற்கு முன்னுரிமை என்பதுதான் எங்க கட்சியின் கோட்பாடு. ஒரு தொண்டன் உண்மையாக உழைத்தால் கட்சியில் முன்னுரிமை உண்டு. அந்த அடிப்படையில் மட்டும்தான், நல்ல இளைஞர், கட்சியின் கொள்கைப்படி ஏழைகளுக்கு உண்மையாக இருப்பார், இவரால் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கருதி இந்த வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள். கட்சியில் என்னை விட நல்ல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சட்டமன்ற தேர்தலுக்கு   எங்கள் மாநில கழகச் செயலாளர் அன்பழகன் தயார் பண்ணியிருக்காங்க, இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு இளைஞனுக்கு வாய்ப்பு வழங்கனும்னு எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கிட்டதால எனக்கு கொடுத்திருக்கிறார்கள். எங்க கட்சியிலேயே சின்னப்புள்ள நான்தான்; ஆனாலும் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். 

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அடிப்படையில் அதிமுகவிற்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

புதுச்சேரி மாநிலத்தில் அதிமுக இரண்டு முறை ஆட்சியில் இருந்தது. அதற்கு பிறகும் எங்கள் கூட்டணிதான் ஆட்சியிலிருந்தது. 2008 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் ரங்கசாமி அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவருக்கு ஆதரவு வழங்கியது எங்களது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையார்தான். 2011ல்  எங்கள் கட்சி கூட்டணியில் தான் ரங்கசாமி முதல்வரானார். நாங்க மட்டும் ஆதரவு தரவில்லை என்றால் அவர் முதல்வர் கிடையாது. அதேபோன்று 2016ல் நடைபெற்ற தேர்தலில் ரங்கசாமி தோல்வி அடைந்தார்.

2021ல் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியும் என்று எல்லாருக்கும் தெரிந்தது. அதன்படி, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, கூட்டணி வைத்து மக்களின் பேராதரவுடன் ஆட்சியைப் பிடித்து ரங்கசாமி முதல்வரானார். புதுச்சேரியில் பாஜக காலூன்றுவதற்குக் காரணமே அதிமுகதான். புதுச்சேரியில் அதிமுக மிகவும் பலம் வாய்ந்த கட்சி. அந்த அடிப்படையில்தான், கூட்டணியே இல்லை என்றாலும், அதைப்பற்றி எந்தக் கவலையுமே கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி அதில் தெளிவாக இருக்கிறார். மக்கள்தான் நம் கூட்டணி, தாய்மார்கள் கிட்ட அன்பா உண்மையா நடந்துக்கோங்க, நாம் செய்த திட்டங்களை அவர்களிடம் சொல்லுங்க என்று கூறியிருக்கிறார். மக்களுக்காக ஒரே வருடத்தில் 27 போராட்டங்களை நடத்திய ஒரே கட்சி அதிமுகதான். மக்களின் செல்வாக்கைப் பெற்ற கட்சியும் அதிமுகதான். 

ஒவ்வொரு கட்சியும் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர். அதேபோன்று பெண் வாக்காளர்களைக் கவருவதற்காக அதிமுக என்ன செய்திருக்கிறது?

நாங்கள் பொதுவாகப் பெண்களைக் கவருவது கிடையாது; தாய்மார்களின் ஆசீர்வாதம்தான் எங்களுக்கு எல்லாம். புதுச்சேரி மாநிலத்தில் எப்போதும் தாய்மார்களின் வாக்கு அதிமுகவிற்குத்தான். இப்போது வாங்கும் ஓய்வூதியத்தை நான் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு, அதனை உயர்த்துவதற்கு முயற்சி மேற்கொள்வேன். பெண்களின் அத்தியாவசியத் தேவையான ரேஷன் அரிசி, ரேஷன் பொருட்கள். புதுச்சேரியில் ரேஷன் கடையை மொத்தமாக மூடிவிட்டார்கள். கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் பாஜக எங்களுடன் கூட்டணி அமைத்த போது ஆட்சிக்கு வந்தவுடன் நாங்கள் முதலில் ரேஷன் கடையைத் தான் திறப்போம் என்று கூறினார்கள்.

ஆனால் அப்படி அவர்கள் பண்ணவில்லை, அந்தச் சமயத்தில் கூட கூட்டணியிலிருந்த அதிமுக, பாஜக கட்சியை எதிர்த்து முதலில் போராட்டம் நடத்தியது. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தால் தைரியமாக எதிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்குச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஏழை மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதால்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் அதுவே நடக்காத போது, அந்தக் கூட்டணி இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன? 

பாஜகவுடன் இனி கூட்டணி இல்லையென்று கூறிய இரண்டு நாள் கழித்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்படி இருக்கும் போது துளியும் பயமில்லாமல் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்தோம். எதற்காகவும், யாருக்காகவும் பயப்படமாட்டோம். மக்கள் நலன்தான் எங்களுக்கு முக்கியம்; எங்களுடைய நலனோ, கட்சியுடைய நலனோ இரண்டாம் பட்சம்தான்.