அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நடக்கிற அரசுதான் மோடி தலைமையிலான மத்திய அரசு என்பதற்கு மீண்டும் ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது.
இந்தியாவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இன்னும் தொடங்கவே படாத ஜியோ இன்ஸ்டிட்டியூட்டையும் மாண்புமிக்க கல்வி நிறுவனம் என்று மோடி அரசு பட்டியலிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த நிறுவனத்துக்காக 9 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு நிதியையும் ஒதுக்கி இருக்கிறது. மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா என்று கேட்பவர்கள் இதையெல்லாம் மோடி அரசின் ஊழல் லிஸ்ட்டில் சேர்க்கவே மாட்டார்கள். இதை மோடி அரசின் கல்வி வளர்ச்சி சாதனையில் சேர்த்து விடுவார்கள். நிஜத்தில் இது வளர்ச்சியா?
இந்தியாவில் மிக நீண்ட காலமாக பழம்பெருமைமிக்கதாக பம்பாய் மற்றும் டெல்லி ஐஐடிகளும், பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி, பிலானியில் உள்ள பிஐடிஎஸ்சும், மணிபால் பல்கலைக்கழகமும் கருதப்படுகின்றன. இவைதவிர, சென்னை மற்றும் கோரக்பூரில் உள்ள ஐஐடிகளுகும் பழம்பெருமை வாய்ந்தவைதான்.
ஆனால், முதல் ஐந்து கல்வி நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் குரூப்பிற்கு சொந்தமான ஜியோ இன்ஸ்ட்டிட்யூட்டை மட்டும் சேர்த்திருக்கிறார்கள். இந்த இன்ஸ்ட்டிட்யூட்டைப் பற்றி கூகுளில் தேடினால் ஒரு விவரமும் கிடைக்கவில்லை. அதாவது அப்படி ஒரு கல்வி நிறுவனமே இல்லை. இல்லாத, இதுவரை இயங்கவே தொடங்காத கல்வி நிறுவனத்துக்கு மோடி அரசு முதலீட்டு மூலதனமாக 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒதுக்கியிருக்கிறது.
இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியனின் விளக்கம் வினோதமாக இருக்கிறது. அதாவது, இந்த ஆறு நிறுவனங்களையும் மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சேர்த்திருப்பதாக லெட்டர் கொடுத்திருக்கிறோம். இனி அவர்கள் தங்களை டாப் கல்வி நிறுவனங்களாக மாற்றும் வகையில் உறுதியான திட்டங்களுடன் வருவார்கள் என்று சாதாரணமாக சொல்லியிருக்கிறார்.
நமது கேள்வி என்னவென்றால் சென்னை மற்றும் காரக்பூரில் பெருமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிற ஐஐடிக்களுக்கு கிடைக்காத வாய்ப்பை தொடங்கப்படாத ஜியோ கல்வி நிறுவனத்துக்கு ஏன் கொடுக்க வேண்டும்? மோடிக்கு ஜியோ செலவழித்த தொகையைத்தான் இப்படி திருப்பிக் கொடுக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.