நேற்று மக்களவையின் முதல்நாள் கூட்டம் நடைபெற்றது, இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பெரும்பாலும் ஹிந்தியில் பதவியேற்றுக்கொண்டாலும் சிலர் அவரவர் தாய்மொழியில் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் மக்களவை நிறைய மொழிகளால் நிறைந்தது. ஒரே நாடு, ஒரே மொழி என்று பாஜக கூறிவந்தாலும், அதன் கட்சியைச் சேர்ந்த மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களிலேயே சிலர் தங்களது பதவி பிரமாணத்தை தங்களின் தாய்மொழியில் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெரும்பாலான மத்திய அமைச்சர்கள், ஹிந்தியில் பதவியேற்றுக்கொண்டனர். அதே வேளையில், மத்திய அமைச்சர்களான டி.வி.சதானந்த கவுடா, பிரஹலாத் ஜோஷி கன்னடத்திலும், ஹர்சிம்ரத் கவுர் பாதல், பஞ்சாபியிலும், மத்திய அமைச்சர்கள், அரவிந்த கணபத் சாவந்த், ராவ்சாஹிப் படேல் தான்பே, மராத்தியிலும், ஜிதேந்திர சிங், டோங்கிரியிலும், பபுல் சுப்ரியோ ஆங்கிலத்திலும், ராமேஸ்வர் தெலி, அசாமி, தேபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் வங்க மொழியிலும், பிஜு ஜனதா தளத்தின் மஹதப் ஒடியாவிலும், மத்திய அமைச்சர்களான ஹர்ஷ்வர்தன், அஸ்வினி சவ்பே, ஸ்ரீபத் நாயக், பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் சமஸ்கிருதத்திலும் பதவியேற்றனர்.
இப்படியாக பல பிராந்திய மொழிகள் நேற்று ஒலித்தன. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்நாடு முன்னோடியாக, முக்கியத்துவமானதாக இருக்கிறது. அப்படியிருக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமிழ்மொழியில் பதவியேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. (இன்று பதவியேற்கவிருக்கிறார்கள்)
எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்தமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்படியாக சென்றுள்ள மக்களவை உறுப்பினர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.