புராண, இதிகாசங்களில் உள்ள கதாபாத்திரங்கள் சில, ‘இப்படியும் இருந்திருப்பார்களா?’ என்று நம்மை ஆச்சரியப்படவைக்கும். ‘கற்பனைதானே?’ எனக் கடந்துபோகச் செய்யும்.
தேவாரம் பாடிய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் ஏழாம் திருமுறையில், 39-வது பதிகம் திருத்தொண்டத் தொகை என்னும் தலைப்பில் உள்ளது. தான் செய்யும் தொழிலிலும் இறையடியார்களுக்கு தொண்டு செய்யலாம் என வாழ்ந்த திருக்குறிப்பு தொண்ட நாயனாரை திருத்தொண்டத் தொகையில், ‘திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்..’ எனப் போற்றுகிறார் சுந்தரர்.
திருக்குறிப்புத் தொண்டர் அப்படியென்ன தொண்டு செய்தார்?
தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில், துணிகளைச் சலவை செய்யும் குலத்தில் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. அவர், தனது குலத்தொழிலைச் செய்ததோடு, சிவனடியார்களின் துணிகளை இன்முகத்தோடு சலவை செய்து அளிப்பதையே தொண்டாக எண்ணி, அதில் இன்பம் கண்டார். அடியார்களின் ஆடையிலுள்ள மாசு நீக்குவதால், தனது பிறப்பின் மாசு நீங்கும் என்றும், அதுவே தெய்வப்பணி எனவும் சிரத்தையுடன் செய்தார். இறைவனால் அவருக்குச் சோதனை ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டதும், அவருடைய பக்தியையும் பெருமையையும் உலகம் அறிந்தது.
சிவனடியார்களின் குறிப்பினை அறிந்து தொண்டு புரிந்த திருக்குறிப்புத் தொண்டரைப் போல், இறை சேவையில் தங்களை ஈடுபடுத்தி வருவோர் யாரேனும் தற்போது உண்டா? என்ற கேள்விக்கு விடையாக, மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கையில் பெரிய அளவு மயில் தோகை விசிறியுடன், பக்தர்களுக்கு விசிறுவதை இறைத்தொண்டாகச் செய்துவரும் 93 வயது முதியவர் நடராஜன் தென்பட்டார்.
விசிறி தாத்தா என்று மதுரைவாசிகளால் அன்போடு அழைக்கப்படும் நடராஜன், கடும் வெயில் காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடலில் இதமான காற்று படும்படி, அந்த மயில் தோகை விசிறியால் எந்த எதிர்பார்ப்புமின்றி விசிறிவிட்டு குளிர்விக்கிறார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியிலும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போதும், சித்திரைத் திருவிழாவிலும் பக்தர்களுக்கு விசிறிவிடும் பணியைச் செய்துவருகிறார்.
கரோனா கட்டுப்பாடுகளால் தடைபட்டிருந்த சித்திரை திருவிழாவால் முடங்கிக்கிடந்த நடராஜன், தற்போது மயில் தோகை விசிறியும் கையுமாக மீனாட்சியம்மன் கோவிலுக்குள் உற்சாகமாகச் சென்றுவருகிறார்.
மக்கள் சேவையே மகேசன் சேவையென, அடியார்க்கு அடியாராய் இறைப்பணியில் ஈடுபடும் நடராஜனுக்கு, வயது ஒரு பொருட்டே அல்ல!
படங்கள் : ஸ்டாலின் போட்டோகிராபி