பொது சிவில் சட்டம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களைப் மூத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா பகிர்ந்து கொள்கிறார்.
மோடி அரசாங்கத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று சொல்வது, ஓநாயின் பாதுகாப்பில் ஆட்டுக்குட்டி இருக்கிறது என்று சொல்வது போன்றது. உலகின் பல கோடி மக்களை ஈர்த்த நபிகள் நாயகம் குறித்து பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் அசிங்கமாகப் பேசினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்து ஒபாமா பேசியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மற்ற நாடுகள் இவ்வாறு பேசினால் இவர்கள் அடக்கி விடுவார்கள். அமெரிக்கா பேசினால் வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.
இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருந்தால் எப்படி ஆள முடியும் என்று மோடி கேட்கிறார். சிவில் சட்டம் என்பது மதத்துக்கு மதம் வேறுபட்டு தான் இருக்கும். அனைவரையும் ஒன்றாக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல், அனைவரையும் பிரிக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். இந்தியா என்பது ஒரு தொகுப்பு நாடு. இங்கு பல்வேறு இனங்கள், மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடைமுறையை கடைப்பிடிப்பார்கள். ஒரு மதத்தை மட்டுமே கொண்ட நாடுகளில் ஒரு சிவில் சட்டம் இருக்கும். இந்தியா போன்ற பல மதங்கள் கொண்ட நாடுகளில் அது சாத்தியமல்ல.
இந்த நாட்டில் என்றும் பொது சிவில் சட்டம் வர முடியாது. பொது சிவில் சட்டம் என்றால் ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் இந்துக்களின் முறைக்கு இஸ்லாமியர்கள் மாற வேண்டுமா? அல்லது இஸ்லாமியர்களின் முறைக்கு இந்துக்கள் மாற வேண்டுமா? இவர்கள் சிறுபான்மையினரை நசுக்குகின்றனர். நம்முடைய நாட்டில் அரசாங்கத்திற்கு மதம் இல்லை என்கிற நிலையை காந்தி வழியில் வந்த காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால் இவர்கள் அரசாங்கத்திற்கு ஒரு மதச்சாயம் பூச முயல்கின்றனர். இது ஒரு மோசமான சட்டம். ஒபாமா போன்றவர்கள் பேசினால் தான் இவர்கள் உணர்வார்கள்.
மோடி நிச்சயம் வீழ்த்தப்பட வேண்டும். இது ஒரு பாசிச அரசு. டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் கை வைக்கும் அவசர சட்டத்தை பாஜக கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் தன்னுடைய முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எப்படி ஏற்படும்? நாளை டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இதே சட்டம் தான் தொடரும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை சரியல்ல.