ஜோதிர் லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானதுமான ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், பக்த கோடிகள் தங்களின் பெரும் பாக்யமாக கருதுவது அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதைத் தான். ஆனால் பாரம்பரியமாக இருக்கின்ற தீர்த்தங்களை மூடிவிட்டு வேறொரு இடத்தில் கிணறு தோண்டி இது தான் தீர்த்தம் எனும் முயற்சியில் இறங்கியுள்ளது தேவஸ்தானம். இது ஆன்மிக ஆகம விதிகளுக்கு முரணானது, பக்தர்களை ஏமாற்றும் மோசடி செயல் என்ற புகைச்சல் எழத் தொடங்கியுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், சிதம்பரத்தைச் சேர்ந்த கீதா, கோவையை சேர்ந்த வெண்ணிலா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், " கோவில் தீர்த்தங்கள், சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்டவைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கினில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நிஷாபானு ஆகியோர் “பக்தர்களின் நலன் கருதி கோவிலின் உள்ளே உள்ள 1 முதல் 6 வரையிலான தீர்த்தங்களை பிரகாரத்திற்கு வெளியே அமைக்கலாம்" என அற நிலையத்துறைக்கு உத்தரவிட, அதையே தங்களுக்கான லாபமாக கருதிய கோவில் நிர்வாகம் ஆக்ரமிப்புக்களை அகற்றாமல் தீர்த்தங்களை மாற்றத் துவங்கியுள்ளனர் என்பது தான் உள்ளூர் மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.
" மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேதுமாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் என மொத்தமாக 22 தீர்த்தங்களில் ஏற்கனவே 2001ம் ஆண்டு சிவ தீர்த்தம், சர்வ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களை இரண்டாம் பிரகாரம் உள்ள வடக்குப் பகுதியில் இடம் மாற்றம் செய்தது கோவில் நிர்வாகம். அதனையும் சேர்த்து அந்த இரண்டாம் பிரகாரத்தில் மொத்தம் இது வரைக்கும் 12 தீர்த்தங்கள் உள்ளது. இப்பொழுது புதிதாக வெளியிலுள்ள காயத்ரி, சரஸ்வதி, சாவித்திரி மற்றும் மகாலெட்சுமி தீர்த்தங்களை அதே இரண்டாம் பிரகாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றது கோவில் நிர்வாகம். இதற்காக மொத்தமாக சேர்த்து 100 அடி ஆழமும், 300 அடி அகலமும் கொண்டு கிணறு தோண்டி தீர்த்தங்கள் பிரித்து விடப்படகின்றன. 2016ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது இரண்டாம் பிரகாரம் வலுவிழந்துள்ளது என அந்த பிரகாரத்தின் மேல் தளத்திற்கு அனுமதிக்காத நிர்வாகம் இப்பொழுது அங்கேயே குழி தோண்டுவது எண்ணற்ற உயிர்சேதங்களை உருவாக்கும், தீர்த்த இடமாற்றம் இப்பொழுது அவசியமற்ற ஒன்று. அப்படியே தேவை எனில் அது அமைந்திருக்கின்ற இடத்திலுள்ள தனியார் ஆக்ரமிப்புக்களை எடுத்தாலே போதும். இது தெரியாமல் வேலையை ஆரம்பித்துள்ளது கோவில் நிர்வாகம்." என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
சென்னையிலுள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலோ., " 15.20 ஏக்கர் பரப்பளவில் கோவில் அமைந்துள்ளது என்கிறது சுதந்திர இந்தியாவின் முதல் சர்வே. தற்பொழுதுள்ள தல வரலாறோ 13.30 ஏக்கரில் அமைந்துள்ளது கோவில் என்கிறது. காயத்திரி,சாவித்திரி மற்றும் சரஸ்வதி தீர்த்தங்கள் கோவிலின் மதில் சுவற்றுக்கு வெளியே வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் இருக்குமிடம் 01 ஏக்கருக்கு குறைவில்லாமல் இருக்கின்றது என்கிறது "அ"பதிவேடு. அங்குள்ள இடங்களை தனியாருக்கு குத்தகை விட்டதால் தீர்த்தத்திற்கு அனுமேஸ்வரர் கோவில் பின்புறம் குறுகலான இடத்தின் வழியாக செல்லவேண்டிய நிலை. அது போல் கோவிலுக்கு வெளியே கிழக்கு நுழைவாயில் பகுதியில் உள்ளது மகாலெட்சுமி தீர்த்தம். இந்த தீர்த்தம் பற்றி வரைபடங்கள் இன்றும் லண்டன் மியுசியத்தில் உள்ளது. இவ்விடத்தில் தீர்த்த டிக்கெட் கொடுக்கும் இடத்தை வைத்து நெருக்கடி உள்ளதாக காரணம் காட்டி இதனையும் மாற்ற முயற்சிக்கின்றது கோவில் நிர்வாகம். இப்பொழுது அமைக்கப்படும் தீர்த்தங்கள் கிணறுகளே.! பாரம்பரிய தீர்த்தங்கள் அல்ல.. ஆகம சில்ப சாஸ்திர அறிவினைக் கூட கருத்தில் கொள்ளாமல் பக்தர்களின் நம்பிக்கையில் விளையாடுகின்றது." எனக் கூறுகிறது.
" பொது நல வழக்கில் கோரப்பட்டது என்னவோ, தீர்த்தங்களில் நெருக்கடி, தீர்த்தங்கள் செல்லும் வழி நெருக்கடி. இதற்குக் காரணம் பணம் வருகிறதே என இருக்கும் இடத்தையெல்லாம் தனியாருக்கு குத்தகை கொடுத்துவிட்டு அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமலும், நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைக்காமல் இருந்ததால் தான் இவ்விளைவே..! இது தான் தீர்த்தம் என போர்டு வைத்திருக்க ஏதோ ஒரு கிணற்றில் குளித்துவிட்டு மனம் நிறைவாகும் மக்களை பணத்திற்காக ஏமாற்றப் பார்க்கின்றது கோவில் நிர்வாகம். இது தடுக்கப்பட வேண்டும்." என்கின்றார் இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் இந்து அமைப்பினர்.