தமிழகத்தில் 5,324 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில், 2,039 கிலோ மீட்டர் சாலைகளை எடப்பாடி அரசும், மீதியுள்ள 3,285 கிலோ மீட்டர் சாலைகளை மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் பராமரித்து வருகின்றன. எடப்பாடி அரசு பராமரித்து வரும் 2,039 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு, தரம் உயர்த்துதல், பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகள் மத்திய சாலைப் போக்கு வரத்துத்துறை அமைச்சகத்தின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக வருஷத்துக்கு சுமார் 3,000 கோடி ரூபாயை எடப்பாடி அரசுக்கு ஒதுக்குகிறது மத்திய மோடி அரசு. இந்த தொகையில்தான் தற்போது ஊழல்கள் மலிந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "எடப்பாடி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள 2,039 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியை மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கீடு செய்யும். மற்றபடி அந்த நெடுஞ்சாலைகளுக்கான திட்டங்கள் குறித்த அனைத்துப் பணிகளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசமுள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை கவனித்துக்கொள்ளும்.
இப்படி கவனித்துக்கொள்வதற்காக மொத்த ஒதுக்கீடு நிதியில் 9 சதவீதம் தொகையை கமிஷனாக எடப்பாடி அரசுக்கு கொடுக்கிறது மத்திய அரசு. அந்த வகையில், மாநில அரசு கவனிக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை செயல்படுத்துவதற்காக தமிழக நெடுஞ்சாலைத்துறையில் தேசிய நெடுஞ்சாலை அலகு என ஒரு பிரிவு செயல்படுகிறது. இதற்கு பாலமுருகன் என்பவர் தலைமைப் பொறியாளராக இருக்கிறார். இவரது கட்டுப்பாட்டில் கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் 4 வட்டங்களும், கோட்டப் பொறியாளர்கள் தலைமையில் 8 வட்டங்களும் உள்ளன. சாலைகளை அகலப்படுத்துதல், மேம்படுத்துதல், உறுதிப்படுத்துதல், பாலங்கள் கட்டுதல் அதனை மறுசீரமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றைக் கவனிக்கிறார் பாலமுருகன்.
கடந்த 3 வருடங்களில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக சுமார் 10,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி. அந்த வகையில், கடந்த 3 நிதியாண்டுகளை கணக்கிடும்போது சுமார் 10,000 கோடி ரூபாய் இதுவரை சாலைப் பணிகளுக்காக செலவிடப்பட்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஊழல் நடந்துள்ளது. அதாவது, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாயை சுருட்டியிருக்கிறார்கள். இந்த ஊழல் விவகாரங்கள் பிரதமர் மோடிக்குப் போனதால், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை நிறுத்துமாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு உத்தரவிட்டுள்ளது பிரதமர் அலுவலகம்'' என்கிறார்கள்.
இந்த ஊழல் வில்லங்கம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக தடையின்றி மத்திய அரசு நிதி வழங்குவதால், அச்சாலைகளை அகலப்படுத்துதல், தரம் உயர்த்துதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நிறைய திட்டங்களை வடிவமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கிறது தமிழக அரசு. அப்படி அனுப்பி வைக்கப்படும் திட்டங்களில் தேவையற்ற திட்டங்கள் நிறைய இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளையும் எதிர்காலத்தில் 10 ஆண்டுகளையும் கணக்கிட்டு விரிவுபடுத்தக்கூடிய சாலைகளை அடையாளம் கண்டு, திட் டம் தயாரித்து அனுப்பிவைக்க வேண்டிய மாநில நெடுஞ்சாலைத் துறையில் தேவையற்ற சாலைகளைக் கணக்கிட்டு அனுப்புகிறது தலைமைப் பொறியாளர் பாலமுருகன் தலைமையிலான தேசிய நெடுஞ்சாலை அலகு பிரிவு. குறிப்பாக, சென்னை கோட்டத்தில் 111 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாலாஜாபாத் -சுங்குவார்சத்திரம் -கீழச்சேரி இருவழிச் சாலை (18.40 கி.மீ.), 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழுச்சூர்-பாலூர் (8.60 கி.மீ.) சாலை, 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு-திருப்போரூர் இருவழிச் சாலை (21 கி.மீ.), 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுவாஞ்சேரி-கோட்டையூர் இரு வழிச்சாலை ( 17.6 கி.மீ.) ஆகியவற்றை 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்துகிறார்கள்.
அதேபோல, மதுரை கோட்டத்தில் 18 கோடி மதிப்பீட்டில் தனிச்சியம்-அலங்காநல்லூர் சீவகப்பட்டி சாலை (13 கி.மீ.), 10 கோடி மதிப்பீட்டில் புதுப்பட்டி-மங்கள்ரேவு சாலை (17 கி.மீ.), 120 கோடி மதிப்பீட்டில் மதுரை-தேனி இரு வழிச்சாலை (26 கி.மீ.) ஆகியவற்றை 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்துகிறார்கள். இந்த சாலைகளில் போக்குவரத்து அதிகமாக இல்லை. மிக விரைவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படப்போவதில்லை. அப்படியிருந்தும் மேற்கண்ட சாலைகளின் போக்குவரத்து கணக்கீட்டை பல மடங்கு அதிகமாக குறிப்பிட்டு மதிப்பீடுகள் தயாரித்து 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தும் திட்டத்தை அனுப்பி வைத்து ஒப்புதல் பெற்றிருக்கிறார்கள்.
தமிழகத்திலுள்ள 11 கோட்டங்களிலும் இப்படி அதிக தொகையை மத்திய அரசிடமிருந்து வாங்கும் போதுதான் அதிக லாபம் (ஊழல்) கிடைக்கும் என திட்ட மிட்டே மதிப்பீடுகள் தயாரித்து ஒப்புதலை வாங்குகின்றனர். நேர்மையானவர்களையும்கூட, எடப்பாடி அரசின் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கரப்ட்டாக மாற்றிவிட்டனர். இதனையடுத்து எடப்பாடி அரசு அனுப்பும் திட்டங்களுக்கு எளிதாக ஒப்புதலை பெற்று தந்துவிடுகிறார்கள் ஆணையத்தின் அதிகாரிகள். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதியில் சுமார் 2000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கி ஆட்சியாளர்கள் வரை இந்த தொகை பங்கு பிரிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு நிதியை பெரிய அளவில் கொள்ளையடிப்பதற்காகவே மாநில நெடுஞ்சாலைகளையெல்லாம் மெல்ல மெல்ல தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் திட்டத்தையும் ரகசியமாக நடத்தி வருகிறது எடப்பாடி அரசின் நெடுஞ்சாலைத்துறை. இதற்காகவே, முழு கவனம் செலுத்துகிறார் தலைமைப்பொறியாளர் பால முருகன். அறிவியல் பூர்வமான ஆய்வை நடத்தினால் இந்த ஊழல் விவகாரங்கள் அம்பலமாகும்''என்கிறார்கள் அழுத்தமாக. இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "இந்தியப் பொருளாதார சரிவை சீரமைக்க கடந்த மாதம் உயரதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடனில் இருப்பது தெரிந்திருக்கிறது.
அதேபோல, சாலை கட்டமைப்புப் பணிகளுக்காக கடன் தருகிற இன்ஃப்ராஸ்ட்ரக் சர்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லீசிங்க் சர்வீஸ் (ஐ.எல்.எஃப்.எஸ்.) நிறுவனத்தை குறித்து விவாதித்திருக்கிறார்கள். அந்த நிறுவனமும் 90,000 கோடி கடனில் இருப்பது தெரிந்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலைப் பணிகளை எடுத்த காண்ட்ராக்டர்கள் எல்லாம் ஐ.எல். எஃப்.எஸ். நிறுவனத்திடம்தான் கடன் வாங்கியிருக்கிறார்கள். வாங்கியவர்கள் முழுமையாக திருப்பிச் செலுத்தவில்லை. இதனையறிந்து, அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த, நடக்கிற தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அப்போதுதான் தமிழக நெடுஞ்சாலைத்துறை நடத்திய ஊழல்கள் தெரிந்திருக்கிறது.
இந்தச் சூழலில், நிதின் கட்கரியின் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பி விசாரித்தது பிரதமர் அலுவலகம். அப்போது, "இனி எந்த ஒரு புது ப்ராஜெக்ட்டுக்கும் ஒப்புதல் தரக்கூடாது. உங்கள் துறையின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இப்போது நடந்துகொண்டிருக்கும் பணிகளை நிறுத்துங்கள்' என செம டோஸ் கொடுத்ததுடன், பல கேள்விகளுக்கு விளக்கமளிக்குமாறு பிரதமர் அலுவலகம் கட்டளையிட, மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். எடப்பாடி அரசின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்திய ஊழல் முறைகேடுகளால் பிரதமர் அலுவலகத்துக்கும் நிதின்கட்கரி அமைச்சகத்துக்கும் முட்டிக்கொண்டது'' என சுட்டிக்காட்டுகிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.
இந்த நிலையில், எடப்பாடி அரசுக்கு சில உத்தரவுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிறப்பித்திருப்பதால், நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகச் சொல்லி, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை அவசரம் அவசரமாக நிறுத்தும் முயற்சியில் இருக்கிறது எடப்பாடி அரசு. ஊழல்களால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எப்படி நொடிந்து போயிருக்கிறதோ, தமிழக நெடுஞ்சாலைத்துறையும் நொடிந்து போயிருக்கிறது. கமிஷனுக்காகவே எடப்பாடியின் நெடுஞ்சாலைத் துறையும் தேவையற்ற சாலைகளையெல்லாம் தரம் உயர்த்துகிறோம் என்கிற பேரில் அகலப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது. இதனை ஆராய்ந்தால் பல ஆயிரம் கோடி ஊழல் பூதம் பூதாகரமாக கிளம்பும்'' என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். இது குறித்து தலைமைப்பொறியாளர் பாலமுருகனை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் எந்த ஊழலும் நடக்கவில்லை' என்கிறார்.