Skip to main content

புது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்!

Published on 03/06/2018 | Edited on 03/06/2018
minister velumani


தமிழகத்தில் புதுவாழ்வுத்திட்டம் நிறுத்தப்பட்டதால், அத்திட்டத்தில் பணியாற்றி வந்த 1500 ஊழியர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வந்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழக கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள நலிவுற்ற பிரிவினரை தெரிவு செய்து, அவர்களின் வறுமையை போக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் புதுவாழ்வுத் திட்டம். கடந்த 15.11.2005ம் தேதி, இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்காக உலக வங்கி ரூ.1665 கோடி கடனுதவி வழங்கி இருந்தது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது.

 

minister velumani


மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் புது வாழ்வுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிராமங்களில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (விபிஆர்சி). இன்னொன்று, ஊராட்சிகள் அளவிலான கூட்டமைப்பு (பிஎல்எஃப்). 


இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு வங்கிகள் மூலம் தனிநபர் கடன் உதவி மட்டுமல்லாது எம்ப்ராய்டரி, தையல், கனரக, இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி, அழகுக்கலை, செல்போன் பழுதுபார்ப்பு, அடிப்படை கணினி பயிற்சிகளும் வழங்கப்பட்டது. 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டு வந்தது.

 

minister velumani


ஊராட்சிகள் அளவிலான கூட்டமைப்பு மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் வாயிலாக கடனுதவி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டமைப்புக்கும் அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை கடனுதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிதி நடவடிக்கைகள் அனைத்துமே வங்கிக் கணக்குகள் மூலமே நடைபெறுவதால் முறைகேடு என்ற பேச்சுக்கே இடமில்லை. 


எனினும், கிராமப்புறங்களில் வறுமை முற்றிலும் தீர்க்கப்பட்டு விட்டதா? என்றால் கேள்விகளே மிஞ்சும். ஆயினும் திட்டத்தின் நோக்கத்தில் கிட்டத்தட்ட 50% அளவுக்கு சாதித்து விட்டதாகவே இத்திட்டப் பணியாளர்கள் சொல்கின்றனர். இந்நிலையில், கடந்த 30.6.2017ம் தேதியுடன் இந்த திட்டம் முடிந்து விட்டது. ஆனால், இன்னும் பத்தாண்டுகளுக்காவது இத்திட்டத்தின் தேவை இருப்பதாகவும் சொல்கின்றனர்.


இதுவரை சொல்லப்பட்டதெல்லாமே புது வாழ்வுத்திட்டத்தின் செயல்பாடுகளும், அவை செயல்படுத்தப்படும் விதமும் பற்றித்தான். ஆனால், இத்திட்டத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பெரும் மனக்குறைகளை நம்மிடம் சொன்னார்கள். 


''வறுமை ஒழிப்புத் திட்டப் பயன்களை, அரசிடம் இருந்து நலிவுற்ற பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்ட மேலாளர், அவருக்குக் கீழ் 7 உதவித்திட்ட மேலாளர்கள், அவர்களுக்குக் கீழ் அணித்தலைவர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியாற்றி வந்தனர். மாநில அளவில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை திட்ட அலுவலராகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இப்படி தமிழகம் முழுவதும் 1500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.


எங்களை பணிக்கு எடுக்கும்போது, 'முற்றிலும் தற்காலிக பணி' என்று எழுத்துப்பூர்வமாக சொல்லித்தான், தொகுப்பூதியத்தில் நியமித்தனர். அதில் ஏதும் பிரச்னை இல்லை. ஆனாலும் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டபடி சில சலுகைகள் வழங்கப்படவில்லை. பணியில் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகள் கழித்தே, ஒவ்வொரு ஊழியரின் பணித்திறனும் மதிப்பீடுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மிக நன்று, நன்று, சுமார் என மூன்று தரமாக வகைப்படுத்தினர். 


இதில், மிக நன்று பிரிவினருக்கு 20%, நன்று பிரிவினருக்கு 10% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின், ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு, அதிகபட்சம் 10% மற்றும் 7.5% மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.


கடைசி ஐந்து ஆண்டுகளில் எங்களின் பணித்திறன்கள் மதிப்பீடும் செய்யப்படவில்லை. அதனால் ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. ஈட்டிய விடுப்பு, விடுப்பு ஒப்படைப்புக்காக 90 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னார்கள். புதுவாழ்வுத் திட்டம் முடிந்து ஓராண்டு ஆகிறது. இன்னும் அந்த தொகை வழங்கப்படவில்லை. பி.எப்., சலுகையும் இல்லை. அப்படி ஏதேனும் இருந்திருந்தால் அதன் மூலமாவது எங்களுக்கு ஏதாவது ஒரு கணிசமான தொகை கிடைத்திருக்கும். வேலை இல்லாத இந்த நேரத்தில் அத்தொகை எங்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும். 

 

minister velumani


எங்கள் கோரிக்கைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். 'விரைவில் புதிதாக புது வாழ்வுத்திட்டம்-2 தொடங்கப்படும். அதுவரை முந்தைய திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேறு துறைகளில் பணி வழங்கப்படும்,' என்று கூறினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். 


இதற்கிடையே, புதுவாழ்வுத் திட்டம்-2க்காக உலக வங்கி 900 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக புதிதாக ஆள்களை நியமிப்பதற்காக தனியார் ஏஜன்சிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்நிலையில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வரும் 4.6.2018ம் தேதியன்று ஊரக வளர்ச்சித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. அப்போதாவது எங்களின் பிரச்னைகளுக்கு அரசாங்கம் நல்ல தீர்வை அளிக்க வேண்டும்,'' என சோகம் கவிய சொல்லி முடித்தார்கள் புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள். 


தொகுப்பூதியம் என்றாலும் ஆயிரம் கனவுகளுடன் நடுத்தர வயதில் பணியில் சேர்ந்த பல இளைஞர்கள் இப்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். போட்டித்தேர்வு எழுதும் வயது வரம்பையும் கடந்துவிட்ட நிலையில், அவர்களின் எதிக்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 


கிராமப்புற வறுமை ஒழிப்புக்காகக் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் கணவரை இழந்த கைம்பெண்களும் கணிசமான அளவில் பணியாற்றி வந்தனர். அந்த வேலைதான் அவர்களின் குடும்பத்தின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வந்தது. ஒட்டுமொத்த ஊழியர்கள் மட்டுமின்றி கைம்பெண்களும் இப்போது நடுத்தெருவில்.