Skip to main content

'லெனின்'றது என் பெயர், 'பாரதி'ன்றது... - மேற்குத் தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதியுடன் ஒரு உரையாடல்

Published on 27/08/2018 | Edited on 27/08/2018

லெனின் பாரதி... பெயரே போதும் கவனமீர்க்க.. இப்பொழுது கோடம்பாக்கத்திலிருந்து தேனி, தேவாரம் வரை தன் படத்தால் கவனம் ஈர்த்திருக்கிறார். 'மேற்குத் தொடர்ச்சி மலை'யை இவ்வளவு உண்மையாக, இவ்வளவு அருகில் யாரும் காட்டியது இல்லை. அந்த வாழ்க்கையை இவ்வளவு நேர்மையாக யாரும்  பேசியது இல்லை. இந்தக் கதையில் நடிக்கிறேன் என்று சொன்ன விஜய் சேதுபதியிடம், "வேண்டாம்... கதை உங்கள் பிம்பத்தைத் தாங்காது" என்று சொல்லி அவரை தயாரிப்பாளராக மட்டும் வைத்துக்கொண்டவர். இத்தனை காரணங்கள் போதாதா, அவரை சந்திக்கும் ஆர்வம் ஏற்பட? சந்தித்தபின், இன்னும் பல காரணங்களும் உருவாக்குகிறார். அவருடன் ஒரு உரையாடல்...

 

lenin barathy



'லெனின் பாரதி' என்பது உங்கள் இயற்பெயர்தானா?

லெனின் என் இயற்பெயர், CPMகாரரான என் தந்தை வைத்த பெயர். பாரதி, நானா சேர்த்துக்கிட்டது. எனக்கு பாரதி மீதும் விமர்சனம் இருக்கிறது, அதுபோலவே லெனின் மீதும் விமர்சனம் இருக்கிறது.

 

 


விஜய்சேதுபதியை ஒரு முறை சந்திக்கும் போது, இந்தப் படத்தை எப்போ ஆரம்பிக்க போறீங்கனு கேட்டதுக்கு, மழைக்காக காத்திருக்கோம்னு சொன்னாரு. அந்த மாதிரி நீங்க சினிமாவுக்குள் வர காத்துக்கிட்டிருந்த காலங்கள் பத்தி சொல்லுங்க...

சினிமாவுக்குள்ள வரணும்னு எனக்கு எத்தனிப்பே கிடையாது. காரணம் எனக்கு சினிமா ஆர்வமே கிடையாது. எங்க சொந்த ஊர் தேனி, அப்பா எங்க ஊர்ல கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்தார். அப்போ நிறைய நாடகங்கள் எல்லாம் போட்டுட்டு இருந்தார், அதனால் அவர் சினிமாவுக்குள்ள வரணும்னு 1985-ல் சென்னை வந்தார். அப்புறம் 87-ல் எங்களையும் இங்க கூட்டிட்டு வந்துட்டார். அப்பா கலைமணி சார்கிட்ட வசனம் எழுதிட்டு இருந்தாரு. ஆனா எங்க குடும்ப சூழ்நிலை காரணத்தால் அவரால் இயக்குனர் ஆகமுடியல. அதனால நான் அதை பண்ணலாம்னு சினிமாவுக்குள்ள வந்தேன்.
  mtm1



சினிமாவுக்குள் வருவதே ஒரு பெரிய போராட்டம். அப்படி வந்தபின் பெரிய படமா எடுத்து புகழ் பெறாம இந்த மாதிரியான சிறு படம் எடுக்கணும்னு ஏன் முடிவு பண்ணீங்க? விஜய்சேதுபதி இந்தப் படத்துக்குள்ள எப்படி வந்தார்?

என்னை பொறுத்தவரை சிறு படம், பெரிய படம்லாம் இல்லை. நல்ல படம், நல்லா இல்லாத படம், அவ்வளவுதான். எனக்கு இந்தப் படம் எழுதி முடிச்சதும் நான் இறந்துட்டாலும் பரவாயில்லை என்ற ஒரு தன்னிறைவு இருந்துச்சு. அதுக்காக எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம். ஏன்னா வழக்கமா மேற்கு தொடர்ச்சி மலைகள் இருக்கும் படத்தில் எப்பவும் ஒரு பசுமை இருக்கும். ஆனா இதுல வறட்சிதான் இருக்கும். முக்கியமா அந்த இடத்தில் நிகழ்ந்த காலமாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் எல்லாம் இருக்கும். இதை எல்லாம் முழுசா தெரிஞ்சிக்கவே எனக்கு ஒரு வருஷம் தேவைப்பட்டது. அப்புறம் அந்தப் பகுதி மக்களோட உடல் மொழி, அதுக்காக ஒரு ரெண்டு வருஷம் அங்க ஒரு வீடு தனியா வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். மொத்தம் மூணு வருஷம் அங்கேதான் இருந்தோம். அப்பறம் கதைனு பார்த்தா, என்னை பாதித்த விஷயங்கள், என்னை தொந்தரவு செய்த விஷயங்கள், என்னை கேள்வி கேட்டுக்கிட்டே இருந்த விஷயங்கள் எல்லாம்தான் நான் கதையா எழுதினேன்.

விஜய்சேதுபதி சார்,  எனக்கு 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் இருந்து பழக்கம். அதுல இருந்து எங்களுக்குள்ள நட்பு இருந்துச்சு. நான் தயாரிப்பாளர்களை தேடிக்கிட்டு இருந்தேன். அவர் அந்த டைம்ல படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. அப்போ அவர் பண்ண முடியாம போன தயாரிப்பாளர்கள் யார்கிட்டயாவது கேட்டுப்பாக்கலாம்னு சேது சார்கிட்ட போய் பேசுனேன். அப்போ அவர் மதுரையில் இருந்தார். சென்னை வந்து பேசறேன்னு சொன்னாரு.

 

vijay sethu lenin



அப்பறம் சென்னை வந்ததும் பத்து நிமிஷம் கதை கேட்டார். அப்பறம் எவ்வளவு சார் பட்ஜெட் ஆகும்னு கேட்டார். நான் ஒரு அமௌன்ட் சொன்னேன், சரி சார் நானே பண்றேன்னு சொல்லிட்டாரு. பத்து நிமிஷத்துக்குமேல அவரு கதையும் கேக்கல. சரினு எடிட் வேலை எல்லாம் முடிச்சுட்டு நானே, சேது ஒரு வாட்டி படத்தைப் பாருங்கன்னு சொன்னதுக்கு 'இல்லை சார் நீங்க டைரக்டர் ஆகணும்னுதான் நான் படம் பண்ணேன்'னு சொல்லிட்டார். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க விரும்பினார் அவர். நான்தான், "உங்க உடல் இந்தக் கதைக்கு ஒத்து வராது, இதுக்கு ரொம்ப ஒல்லியான ஒருவர் வேணும்" என்று சொல்லி தவிர்த்தேன். அதையும் ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல, அப்போ நாலஞ்சு படங்கள் நடிச்சு, வெற்றி பெற்று அவர் மேல் ஒரு பிம்பம் ஏறி இருந்தது. இந்தக் கதை அதைத் தாங்காது.

 

 


தயாரிப்பாளருக்கு முன்னாடியே இளையராஜா சாரை கமிட் பண்ணிட்டீங்கனு சொன்னாங்க. அது எப்படி நடந்தது?

இந்தக் கதைக்கு அவர்தான் பொருத்தமானவர். ஏன்னா அந்தக் கதை பேசும் அரசியல், அந்தக் களம் எல்லாமே எங்களுக்கு முன்னாடி பாத்தவரு அவர்தான். அதுக்கும் மேல நாங்க படப்பிடிப்பு நடத்திய பகுதி 40-50 வருஷம் முன்பே அவர் காலடி பட்டிருந்த இடம். அதனால் அவரைத் தாண்டி என்னால் யோசிக்க முடியல. 2011-ல் இந்தக் கதை எழுதி முடிச்சதும் அவர்கிட்டதான் சொன்னேன். அப்புறம் இது சின்ன பட்ஜெட் படம்தான், ஆனா நீங்கதான் பண்ணனும்னு சொன்னேன். 'நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே பண்றேன்'னு சொல்லிட்டாரு.

  mtm 2



'மேற்குத்தொடர்ச்சி மலை'... ஒரு குறிப்பிட்ட நில அமைப்பு சார்ந்த கதை எல்லோரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எப்படி நம்பினீர்கள்?

இந்தப்  படத்தையே உலகம் முழுக்க இருக்கிற நிலமற்ற உழைக்கும் மக்களுக்குத்தான் டெடிகேட் பண்ணியிருக்கோம். உடமை இல்லாத ஒரு கூட்டத்தை இன்னமும் வச்சிருக்கோம் இல்லையா? இதுல இருந்துதான் எல்லா அரசியலுமே தொடங்குது. நகர்வாசியால் இந்தப் படத்தை நிச்சயம் உள்வாங்க முடியும். நாங்க இந்தப் படத்தை ஃபிரான்ஸ் ஃபெஸ்டிவல்ல போட்டு முடிச்ச பிறகு அங்குள்ள ஒரு பத்து மலைக்கிராம மக்கள் படத்தைப் பாக்க வந்திருந்தாங்க. 'நீங்க எங்க மலைக் கிராமத்திற்கு வந்து இந்தப் படத்தை போட்டுக்காட்டுங்க, இது எங்க வாழ்க்கையோட ரொம்ப நெருக்கமா இருக்கு'னு சொன்னாங்க. அதுக்காக நாங்க 'ஃபெஸ்டிவல்' இல்லாம தனியா அவங்களுக்காக திரையிட்டோம். மனித உணர்ச்சி என்பது ஒன்றுதான், இதுல நகரம், கிராமம் அப்படிலாம் இல்லை.

தமிழ் சினிமாவில் பொதுவாகவே ஆழமான அரசியல் படங்கள் வருவதில்லை. அதற்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?

வியாபாரம்தான்! இங்க இருக்கவங்க சினிமாவை கலையாகவே பார்ப்பதில்லை. இது வணிகம் சார்ந்த கலைதான், ஆனா வெறும் வணிகம் மட்டும் இல்லை.