மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக தமிழ்க் கையெழுத்து விழா நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைப்பெற்றது.
காலை 9 மணிக்கு சகாயம் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள் என திரளாக ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்த கையெழுத்து இயக்கத்தை கின்னஸ் சாதனை முயற்சிக்காக வீடியோ பதிவு செய்தனர்.
இந்த விழாவில் பாரம்பரிய கலைநிகழ்ச்சி, பாரம்பரிய உணவு வகைகள், சந்தை அமைக்கப்பட்டது.
இந்த விழாவில் வேல்முருகன், பழநெடுமாறன், ஹரிபரந்தாமன், மணியரசன், அற்புதம்மாள், அய்யாக்கண்ணு, தியாகு, டி.வி.பிரகாஷ், கெளதமன், செல்வமணி என கலந்துகொண்டு உரையாற்றினர்.
வேல்முருகன் பேசுகையில், "இந்த தமிழ் விழா மிக முக்கியமானது. இப்போதுள்ள நிலையில் இந்த விழா மிக அவசியமானது. நான் சட்டமன்றத்தில் இருந்தபோது கல்குவாரியில், மணல் குவாரிகள், கொள்ளை போவதை அறிந்து அதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தேன். அப்போது சிறு சிறு நிறுவனத்திடமிருந்து காப்பாற்றி தற்போது பெரும் முதலாளியான கார்ப்பரேட் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளனர்.
இந்த விசயத்தை அய்யா சகாயம் அவர்கள் தனி மனிதனாக நின்று போராட்டம் செய்து உள்ளார். எந்த சூழ்நிலையிலும் நேர்மையாகவும் உண்மைக்கும் நாட்டு மக்களின் நலனுக்காக யார் போராடினாலும் நாங்கள் துணை நிற்போம்" என்றார்.
பழநெடுமாறன் பேசியபோது, தமிழ் மொழி என்பது தனித்துவமான ஒன்று. அது நாடு முழுவதும் போற்றப்படும் மொழி, பேசப்படும் மொழி, ஆதி மொழி அந்த மொழிக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த விழா இருக்கிறது. இந்த விழா நிச்சயம் கின்னஸ் சாதனை படைக்கும். தமிழ் என்ற மொழியை எவராலும் அழிக்க முடியாது என்றார்.
சகாயம் ஐ.ஏ.எஸ். பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைக்க ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தமிழில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வு தமிழகத்திற்கான நிகழ்வு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் மூத்த தமிழ் சமூகதிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு" என தெரிவித்தார்.
மேலும், "இயக்கம் ஆரம்பித்தாலே அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் சமூகத்தை தட்டி எழுப்பும் ஒரு இயக்கமாகவே மக்கள் பாதை இருக்கும். தேர்தல் அரசியலை விட தமிழ் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கிறது. நேர்மையான அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதே முக்கியம்" என்றார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் பேசுகையில், "நிச்சயமாக இது வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த நிலைமை முழுமையாக மாறவேண்டும் என்றால் தமிழில் கையெழுத்து போதாது, அனைத்து குழந்தைகளும் என்றைக்கு தமிழ் வழியில் பயில்கிறார்களோ அன்றைக்கு இது வெற்றிபெறும். தனி மனிதனாக நின்று போராட்டம் செய்த அரசு அதிகாரி என்றால் அது சகாயம்தான். வாழ்த்துகள்" என்றார்.