கிருஷ்ணகிரி அருகே, கோயில் திருவிழாவின்போது பூசாரிகள் கையால் சாட்டையால் அடி வாங்கினால், தங்களைப் பிடித்திருக்கும் பேய், பிசாசுகள் ஓடிவிடும் என்ற வினோத நம்பிக்கையுடன் பக்தர்கள் இன்றளவும் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழர்கள் என்போர் தனிப்பெரும் இனக்குழுவாக இருந்தாலும், இடைவந்த சாதிகளால், சாதிக்கொரு வாழ்வியல் கூறுகளைக் கொண்டிருக்கின்றனர். ஒரே சாதியின் உட்பிரிவுகளில்கூட உடையணிவது முதல் திருமணம், இறுதிச்சடங்குகள் வரை ஆங்காங்கே சின்னச்சின்னதாக வேறுபடுகின்றனர். ஒரே சாதியின் உட்குழுவில் ஒரு பிரிவைச் சார்ந்த பெண்கள் மூக்குத்தி அணிவதும், மற்றொரு பிரிவினர் மூக்குத்தி அணியாமலும் இருப்பதைக் காண்கிறோம். எல்லாமே, 'நாகபதனி' வம்சத்திற்கும், 'நாக'ப்'பதனி' வம்சத்திற்கும் உள்ள வேறுபாடுதான்.
தமிழர்களிடையே நிலவும் பல்வேறு சாதியக்குழுக்கள் பின்பற்றி வரும் கோயில் திருவிழாக்கள்கூட அவர்களின் பாரம்பரியம், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர், கோயில் திருவிழாவின்போது தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கின்றனர். பெரும்பான்மை சமூகத்தினர், கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அலகு குத்துகின்றன்றனர். காவடி எடுக்கின்றனர். விமான அலகு என்ற பெயரில் அந்தரத்தில் தொங்குவோரும் உண்டு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள மகா வீரகரரை வணக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், பூசாரிகள் கையால் சாட்டையடி வாங்குவதை கடவுளிடம் வேண்டி விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். அதில், இன்னொரு விசேஷ காரணமும் சொல்கின்றனர். அவ்வாறு சாட்டையால் அடி வாங்கினால், பக்தர்களைப் பிடித்திருக்கும் பேய், பிசாசுகள் அவர்களை விட்டு ஓடிவிடுமாம். ஆமாம். தமிழ் இலக்கணத்தில், 'உயிர் வரின் உக்குரல் மெய் விட்டோடும்' என்பார்கள். அதுபோல, பக்தர்களின் மெய்யை விட்டு பேய்கள் ஓடிவிடும். காலங்காலமாக அப்படியொரு நம்பிக்கை அவர்களுக்கு.
போச்சம்பள்ளி அருகே உள்ள குடிமேனஹள்ளி தென்பெண்ணை ஆற்றங்கரையில், மகாவீரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழாவும், கிட்டத்தட்ட தேர்தல் போல, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. உள்ளூர்க்காரர்கள் மட்டுமின்றி அச்சமூகத்தின் உறவினர்கள் வெளியூர், வெளிநாடுகளில் வசித்து வந்தாலும் திருவிழா நேரத்தில் சொந்த மண்ணுக்கு வந்து விடுகின்றனர். பெரியவர்கள் முதல் பொட்டு பொடிசுகள் வரை கோயில் திடலில் குவிந்து விடுகிறார்கள். திருவிழா நடைமுறைகள், சாட்டையடி போன்ற மூடநம்பிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், சொந்தபந்தங்களை ஒரே இடத்திற்கு வரவழைப்பதில் இதுபோன்ற கலாச்சார விழாக்களால் ஒருவிதத்தில் நன்மையும் இருக்கவே செய்கிறது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் கழித்து மகா வீரகரர் கோயில் திருவிழா திங்கள் கிழமை (பிப். 10) நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவைக் காண வந்திருந்தனர்.
சென்றாய பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. மகாவீரகரர் சுவாமிக்கு புதுப்பானையில் பொங்கலிட்டும், ஆடு, கோழிகள் பலியிட்டும் பூஜைகள் செய்யப்பட்டன. இவ்விழாவில், ஆயிரம் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேர்த்திக்கடன் செலுத்தப்பட்ட ஆடுகள், கோழிகள் கோயில் திடலிலேயே வெட்டி தலைக்கறி, குடல் கறி, ரத்தம் என கூறுபோட்டு, அடுப்பு மூட்டி சமைத்து பக்தர்களுக்கு விருந்து வைக்கின்றனர்.
இந்தக் கோயில் விழாவில் இன்னொரு ஹைலைட் அம்சமும் உண்டு. அதுதான், பேய்களை சாட்டையால் அடித்து விரட்டும் நிகழ்ச்சி. கோயில் பூசாரியிடம், பக்தர்கள் சாட்டையால் அடி வாங்கினால், அவர்களைப் பிடித்திருந்த பேய், பிசாசுகள் விலகி ஓடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கோயில் திடலில் வரிசையாக மண்டியிட்டு, இரண்டு கைகளையும் மேலே தூக்கியபடி அமர்ந்து கொள்கின்றனர். அவர்களை பூசாரிகள் சாட்டையால் அடித்து பேய் ஓட்டினர். இந்த சாட்டையடியை, பக்தர்கள் வீரகரருக்கு செலுத்தும் நேர்த்திக்கடனாகவும் கருதுகின்றனர்.
பேய், பிசாசுகள் பிடித்தவர்கள் எத்தனைமுறை சாட்டையால் அடித்தாலும் வைகைப்புயல் வடிவேல் மாதிரி, வலிக்காததுபோலவே அமர்ந்து இருக்கிறார்கள். பிசாசுகள் உடலில் இருந்து ஓடியவர்கள், ஒரே அடியில் அங்கிருந்து எழுந்து ஓடிவிடுகின்றனர். ஒரே ராக்கெட்டில் 100 செயற்கைக்கோள்களைக்கூட அனுப்பும் அளவுக்கு இந்தியா வளர்ந்து விட்டது. ஆனால் தமிழர்கள், இன்னும் சாட்டையால் அடித்து பேய் விரட்டுகிறார்கள். நிற்க. பேயும் பிசாசும் பிடித்தவர்கள் எப்படி கோயில் திடலில் சுதந்திரமாக உலாவ முடிகிறது என்கிற தர்க்கப்பிழைதான் தட்டுப்படுகிறது. நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடுகையில், மிஷ்கினின் 'சைக்கோ'வில் மலிந்து கிடக்கும் தர்க்கப்பிழைகளைக்கூட பொருட்படுத்திக் கொள்ளலாம்தான்.