Skip to main content

தேர்தலில் அவர்கள் ராமர் படத்தை காட்டினார்கள்... ஆனால் திமுக அமோக வெற்றி பெற்றது - கோவை ராமகிருஷ்ணன்

Published on 25/01/2020 | Edited on 26/01/2020

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

துக்ளக் விழாவில் பெரியார் பேசியது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதுதொடர்பாக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவரது வீட்டை முற்றுகையிட போவதாக கூறி அதற்கான முயற்சிகளையும் செய்தீர்கள். ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்கள். உங்கள் போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கருத முடியுமா?

பெரியார் தொடர்பான சர்ச்சை கருத்துக்களை அவர் கூறிய இந்த ஒருவார காலமாக அவர் எந்த தொலைக்காட்சியையும் சந்திக்கவில்லை. இன்று அவருடைய வீடு முற்றுகையிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்ட நிலையில் முதல் முறையாக தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இதுவே எங்கள் போராட்டத்தினால் வந்த விளைவுதான் இது.  போராட்டத்திற்கு பயந்துதான் இந்த பதிலை அவர் தெரிவித்துள்ளார். கூடவே இந்த செய்தியை மறுக்க முடியாத உண்மை என்றும், மறக்க வேண்டிய சம்பவம் என்றும் கூறியுள்ளார். மறக்க வேண்டிய சம்பவம் என்று ரஜினியே இதை குறிப்பிடுகிறார். ஆனால், கடந்த 14ம் தேதி இந்த விஷயத்தை அவர் மறந்திருந்தார் என்றால் இந்த பிரச்சனைக்கே வேலை இல்லாமல் போயிருக்கும். 71ல் நடந்த விஷயத்தை அவர் இப்போது ஏன் பேசுகிறார். 
 

s



யார் சொல்லிக்கொடுத்து அவர் பேசுகிறார் என்று நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. 50 வருடத்துக்கு முன்பு நடந்த அந்த விஷயத்தை இப்போது ஏன் கொண்டு வர வேண்டும். இப்போது யாராவது அதை பற்றி கேட்டார்களா? இன்னும் சொல்லப்போனால் அப்போது வெளிவந்த சோ தலைமையிலான துக்ளக் பெரியார் ராமனை செருப்பால் அடிப்பது போலவும், அதனை கலைஞர் கைக்கொட்டி சிரிப்பது போலவும் துக்ளக்கில் கற்பனை படத்தை வெளியிட்டார்கள். காங்கிரஸை ஆதரிக்கிறேன் என்கிற பேரில் இத்தகைய செயல்களை அப்போதே செய்தார்கள். திமுக எதிர்ப்பு என்பதற்காக இதனை கடந்த 50 ஆண்டுகளாகவே தொடர்ந்து செய்து வருகிறார்கள். 71ம் வருடம் தேர்தலில் செயற்கையாக அவர்கள் உருவாக்கிய அந்த படத்தை காட்டி தேர்தலின் போது மக்களிடம் இவர்களுக்காக உங்கள் ஓட்டு என்று கேட்டார்கள். ஆனால் 67ல் திமுக வெற்றிபெற்ற இடங்களை விட 71ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் 184 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. திமுகவுக்கு எதிராக அதை பயன்படுத்தலாம் என்று பார்த்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு எதிராகே சென்றது. எனவே இவர்களின் இந்த பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.